கடற்படையினரால் தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

ஒக்டோபர் 20, 2022

இலங்கை கடற்படை (SLN) ஒரு தொகுதி தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகளை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட இந்த மருத்துவ கருவிகள் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (தொற்றுநோய் அல்லாத நோய்கள்) வைத்தியர் சம்பிக்கா விக்கிரமசிங்கவிடம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் நேற்று (அக்டோபர் 19) கையளிக்கப்பட்டது.

தலசீமியா நோயாளிகளின் முக்கிய உறுப்புகளில் ஒன்று சேரும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான இரும்பு படிவுகளை அகற்ற இக்கருவி இன்றியமையாததாகும்.

குறைந்த விலையில் இக்கருவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு கடற்படை சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் இந்த மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

2001 ஆம் ஆண்டு முதல் இதுவரை, கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் 2774 தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு தலசீமியா சிகிச்சை கருவிகளை உற்பத்தி செய்வதற்காக அழகு சாதன சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் சான்றிதழ் எண் (டி.வி.ஆர்-பி.ஆர் -019014) பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கடற்படை கொள்கை மற்றும் திட்டங்கள் பணிப்பாளர் கொமடோர் சிந்தக குமாரசிங்க மற்றும் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் அதிகாரிகளும் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.