நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள் - பாதுகாப்பு செயலாளர்

ஒக்டோபர் 26, 2022

பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து வாழும் எமது நாட்டின் இனங்களுக்கிடையே சமாதானம், சகவாழ்வு மற்றும் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தேவை வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் மிகத் தீவிரமாக உணரப்படுவதாகவும் நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சமூகங்களுக்கிடையே சகவாழ்வை நிலைநாட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட வேலைத்திட்டத்திற்கு வலுவூட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களையும் உற்படுத்தி தேசிய மாணவர் படையணி மௌன சேவையை செய்து வருகின்றது என அவர் தெரிவித்தார்.

இன்று (அக்டோபர் 26) ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற 105வது ஹெர்மன்லூஸ், டி சொய்சா சவால் கிண்ணம் – 2022 தேசிய மாணவர் படையணி அணிவகுப்பில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாணவப் பருவத்தில் மாணவர் படையணி நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறுவர்கள் சிறந்த தலைமைப் பண்பு, ஒழுக்கம், கடமைகளைச் செய்வதில் விடாமுயற்சி, சவால்களை எதிர்கொள்ளும் திறன், மற்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்வார்கள் என சமூகத்தில் பலமான நம்பிக்கை உள்ளது. இம்மாணவர் படையணிகளை கான்கையில் அதன் உண்மை தெளிவாக புலப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மற்றும் கலந்து கொண்டு சிறப்பாகப் போட்டியிட்ட அனைத்துப் பாடசாலை மாணவ படையணிகளுக்கும், மேலும் அவர்களை இச்செயல்பாடுகளில் ஈடுபட ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் வாழ்த்துத் தெரிவித்தார்.

உலக தொழில்வாய்ப்புத் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இக்காலகட்டத்தில், அதற்கேற்ப செயற்கை நுண்ணறிவு, தன்னியக்கமாக்கல், ரோபோட்டிக்ஸ் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் அதற்காக எமது பிள்ளைகள் தற்போதிருந்தே தயாராக வேண்டுமெனவும் அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

டிஜிட்டல் கல்வியறிவு, ஆங்கில மொழித்திறன் மற்றும் எந்தவொரு எதிர்கால சூழலுக்கும் முகங்கொடுக்க உங்கள் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர் படையணி பயிற்சி அதற்கான உங்களின் திறன்களை மேம்படுத்தியுள்ளது அத்துடன் பயிற்சியின் மூலம் பெறப்படும் திறன்களையும் அறிவையும் பயன்படுத்தி தேவையான பிற திறன்களையும் வளர்த்துக் கொள்ளுமாறு அவர் மாணர்வகளிடம் கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் தான் மாணவர் படையணியின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதற்கமைய தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விழாவிற்கு வந்த பாதுகாப்பு செயலாளர் தேசிய மாணவர் படையணி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர (ஓய்வு) அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் அவருக்கு மரியாதையை அணிவகுப்பும் அளிக்கப்பட்டது.

வெற்றியாளர்ககளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பிரதம அதிதியினால் வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வின் போது மாணவர் படையணி பேண்ட் வாத்திய குழுக்களின் கண்காற்சியும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மரியாதைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து மதப் பிரமுகர்கள், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன, தேசிய புலனாய்வு தலைவர், இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், விமானப்படை தலைமை பணியாளர், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ படையணி உறுப்பினர்களின் பெற்றோர்கள் உட்பட பல அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.