இலங்கை கடற்படையின் புதிய கப்பல் இலங்கைக்கு வந்தடைந்தது

நவம்பர் 02, 2022
  • அமெரிக்க கடலோர காவல்படையிடமிருந்து பெறப்பட்ட கப்பல் கொழும்பு வந்தடைந்தது
  • இலங்கை கடற்படையின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதற்கு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட கப்பல் இன்று காலை (02 நொவம்பர்) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன் பிரதம அதிதியாகவும், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கௌரவ அதிதியாகவும் கலந்துக் கொண்டனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் கௌரவ ஜூலி சுங் அவர்களும் இந்நிகழ்வில்  கலந்து கொண்டார்.

இக்கப்பல்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் (26 அக்டோபர், 2021) அமெரிக்க கடலோர காவல்படையால் இலங்கை கடற்படையிடம்  ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயப்படுத்தப்பட்ட கப்பல் செப்டம்பர் மாதம் 03ஆம் (2022) திகதி இலங்கை நோக்கி அதன் பயணத்தை ஆரம்பித்தது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் வரவேற்றார்.

கொழும்பு துறைமுகத்தையடைந்த பென்னன்ட் எண், P627 என்ற அடையாலத்தைப் பெற்ற  கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை மரபுக்களுக்கமைய  வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின் கப்பலில் கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திசாநாயக்க கடற்படைத் தளபதியிடம் கப்பலின் வருகையை அறிவித்ததுடன் கப்பலுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து  கடற்படைத் தளபதியுடன் இராஜாங்க அமைச்சர்,  பாதுகாப்புச் செயலாளர்  மற்றும் அமெரிக்கத் தூதுவர் கப்பலுக்குச் சென்று பார்வையிட்டனர்.  இதன் போது கடற்படைத் தளபதி மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரியினால்  கப்பலின் வசதிகள் மற்றும் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து அதிதிகளுக்கு  விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கப்பலின் கட்டளை அதிகாரியினால் கௌரவ அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற  முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பல் “டக்ளஸ் மன்ரோ” என்ற இக்கப்பல், இரண்டாவது ஹாமில்டன் கிளாஸ் ஹை எண்டூரன்ஸ் கட்டர் வகையை சார்ந்ததாகும். 115 மீ நீளம் கொண்டது இக்கப்பல் 187 பணியாளர்களை ஏற்றிச் செல்லக்கூடியது. அதிகபட்சமாக 29 நொட் வேகத்தில் 14000 கடல் மைல்கள் கடக்கும் திறன் கொண்டது. இது இலங்கை  கடற்படையின் கடல்சார் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற ஆயுத அமைப்புகள் மற்றும் நவீன இயந்திரங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கட்டர்  P 627 இக் கப்பல், கடற்படையின் வரலாற்றில் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் நீண்ட கடல் பயணத்தை மேற்கொண்டு வரலாறு படைத்துள்ளது.

இக் கப்பலானது,  இலங்கைக்கு வரும் வழியில் ஹவாயின் ஹொனலுலு,  குவாமின் அப்ரா,   பிலிப்பைன்ஸின் மணிலா மற்றும் சிங்கப்பூரின் சாங்கி உள்ளிட்ட பல துறைமுகங்களில் அதன் சேவைகளுக்காக நிறுத்தப்பட்டு தனது கடல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

இக் கப்பலை நவீனமயமாக்கும் பணியின் போது சுமார் 130 பணியாளர்களைக் கொண்ட ஆரம்பக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

 பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, இராணுவ மற்றும் விமானப் படைத் தளபதிகள், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், இராஜதந்திரப் படை உறுப்பினர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.