--> -->

பல பகுதிகளில் கனமழை மற்றும் மண்சரிவு எச்சரிக்கை

நவம்பர் 08, 2022

நாட்டில் நிலவும் மழையின் காரணமாக பல மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என , தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (நவம்பர் 7) இரவு 10.00 மணியளவில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, நுவரெலியா, மொனராகலை, பதுளை, மாத்தறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு இன்று (8) இரவு 10.00 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்காலத்தில் ஏற்படக்கூடிய மண்சரிவு, நிலத்தில் வெடிப்பு உருவாகுதல், மரங்கள் சாய்வடைதல், நிலத்திலிருந்து திடீரென நீரூற்றுகள் மற்றும் சேற்று நீர் தோன்றுதல் மற்றும் தற்போதுள்ள நீரூற்றுக்கள் தடைபடுதல் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்துகிறது.

இதேவேளை, சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும் எனவும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.