அதிரடிப்படையின் போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

செப்டம்பர் 01, 2019

அதிரடிப்படையின் 35ஆவது போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வு கட்டுகுருந்த அதிரடிப்படை பயிற்சி கல்லூரியில் இன்று (செப்டெம்பர், 1) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

குறித்த நிகழ்விற்கு வருகைதந்த பாதுகாப்பு செயலாளரை பதில் பொலிஸ் மா அதிபர், சீடி விக்ரமரத்ன அவர்கள் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து செயலாளர் அதிரடிப்படை போர் வீரர்கள் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இங்கு உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் மனிதாபிமான செயற்பாட்டின்போது தமது உயிர்களை தாய் நாட்டிற்காக அர்ப்பணித்த மற்றும் தமது உடல் அவயவங்களை தியாகம் செய்த அதிரடிப்படையினருக்கு நன்றி தெரிவித்ததுடன், பயங்கரவாதத்திற்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட பங்களிப்பையும் பாராட்டினார்.

மேலும், பயங்கரவாத பிரச்சினை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கான எதிர்ப்பு நடவடிக்கையின் போதான அதிரடிப்படை பிரிவின் பாங்கினையும் செயலாளர் இங்கு பாராட்டினார். அத்துடன், செயலாளர் அவர்கள் கிழக்கு – பாதுகாப்பு கட்டளை தளபதியாக சேவையாற்றிய போது இப்பிரிவினால் வழங்கப்பட்ட சேவையினையும் இதன்போது நினைவூட்டினார். தற்போதைய சந்ததிகள் பின்பற்றுவதற்கு இப்படை பிரிவினால் வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் தியாகங்கள் ஒரு சிறந்த உதாரணம் என தெரிவித்த செயலாளர், தாய் நாட்டிற்காக தமதுயிரை அர்ப்பணித்த மற்றும் தமது உடல் அவயவங்களை தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கும் நன்றியினையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, செயலாளர் அங்கவீனமுற்ற அதிரடிப்படையின் ஒரு குழுவினருக்கு செயற்கை கால்கள் மற்றும் சக்கர நாற்காலிகளையும் வழங்கிவைத்தார். மேலும், அதிரடிப்படை வீரர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மூக்குக்கண்ணாடிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் செயலாளர், இப்படை பிரிவை ஆரம்பித்து நாட்டுக்கு பெரும் சேவையாற்றிய அதிரடிப்படைப்பிரிவு, பிரதிப் பொலிஸ்மா அதிபர், சகபண்டு அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், பயிற்சி கல்லூரியின் காலாண்டு யுத்த பயிற்சி பகுதி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக அனுப்பப்படும் வாகனங்களையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி. சோனியா கோட்டேகொட, அதிரடிப்படை தளபதியும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான, எம் ஆர் லத்தீப், சிரேஷ்ட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விஷேட அதிரடிப்படையானது மனிதாபிமான நடவடிக்கையின்போது சுமார் 464 வீரர்கள் மற்றும் 6 சிவில் ஊழியர்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.