இலங்கை விமானப்படை போக்குவரத்து குழுவினால் சிவில் நலன்புரி நிகழ்வுகள் முன்னெடுப்பு

செப்டம்பர் 02, 2019

மத்திய ஆபிரிக்க குடியரசின் ஐக்கிய நாடுகள் சபை பல பரிமாண ஒருங்கிணைந்த சீர்திருத்த பணியிலுள்ள இலங்கை விமானப்படை போக்குவரத்து குழுவினர் கடந்த மாதத்தில் பல்வேறு முக்கிய சிவில்-இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மற்றும் மருந்து நன்கொடை திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மத்திய ஆபிரிக்க குடியரசின் பிரியாவை அண்மித்துள்ள கிராமங்களில் மோதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக விமானபடை தகவல்கள் தெரிவிக்கின்றன.

4ஆவது இலங்கை விமானப்படை போக்குவரத்து குழுவினரினால்ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின்மூலம் 1000க்கும் அதிகமான குழந்தைகள் பயனடைந்துள்ளனர். குழந்தைகளுக்கு ஆடைகள், பொம்மைகள் மற்றும் கால்பந்துகள் ஆகியன பரிசளிக்கப்பட்டதுடன், விமானப்படை போக்குவரத்து குழு பிரதிநிதிகளினால் கற்றல் உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும் இந் நிகழ்வின்போது ஒரு நாளைக்கு போதுமான அளவு மதிப்புடைய சுமார் 2000க்கும் அதிகமான உலருணவு பொதிகள் இவ்உள்ளூர் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன.

அத்துடன், சிவில் இராணுவ ஒத்துளைப்பு நடவடிக்கைகளுக்கு இணையாக பிரியாவின் உள்ளூர் மருத்துவமனையில் மருந்து நன்கொடை நிகழ்வுகளும் இடம்பெற்றன.