நிர்க்கதியில் இருந்த இந்திய மீனவர்களுக்கு கடற்படையினர் உதவி

செப்டம்பர் 02, 2019

வட பிராந்திய கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த கடற்படை படகின் கண்காணிப்பு வீரர்கள், யாழ்ப்பாணம் கச்சதீவு கடலுக்கு அப்பால் கடலில் நிர்க்கதியான நான்கு (04) இந்திய மீனவர்களை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 01) மீட்டுள்ளனர். குறித்த நான்கு மீனவர்களும் எதிர்பாராதவிதமாக கடலில் தத்தளித்து கொண்டிருந்த வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை வட பிராந்திய கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த குறித்த மீனவர்களை அவதானித்த கடற்படை வீரர்கள் விரைந்து செயற்பட்டு இம்மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். பலமணிநேரம் கடலில் அவதியுற்று களைப்புற்று காணப்பட்டிருந்த இம்மீனவர்களை அவதானித்த கடற்படை வீரர்கள் உணவு மற்றும் குடி பானங்கள் வழங்கியுள்ளனர். இந்நான்கு இந்திய மீனவர்களும் 37வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

படகு மற்றும் மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.