இராணுவம் நவீன ரக ஸ்கேனர்களை “அபேக்க்ஷா வைத்தியசாலைக்கு” வழங்கி வைப்பு

ஜூன் 18, 2019

இலங்கை இராணுவம் மஹரகமயில் உள்ள அபேக்க்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்கு சம்சுங் HS40 ரக வகையிலான இரண்டு அல்ட்ரா ஸ்கேனர் அலகுகளை நேற்று (ஜூன், 17) அன்பளிப்பு செய்துள்ளது. இந்நவீன ரக ஸ்கேனர்கள் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நாட்டின் பிரதான மருத்துவமனையான அபேக்க்ஷா வைத்தியசாலைக்கு மிகவும் தேவையான மருத்துவ உபகரணங்களாக காணப்படுவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ வீரர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தை அன்பளிப்பு செய்ததன் பிரகாரம் நிதி சேகரிக்கப்பட்டு இந்நவீன ரக ஸ்கேனர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், இம்மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் குறித்த ஸ்கேனர்களை வழங்கி வைத்துள்ளார்.

கடந்த மாதம் (மே) 22ஆம் திகதி இடம் பெற்ற “பரம வீர விபூஷன பதக்கம்” வழங்கும் நிகழ்வின்போது இராணுவத் தளபதி அவர்களால் உத்தியோக பூர்வமாக இப்புதிய ஸ்கானர்களை பெற்றுக் கொள்வதற்கான காசோலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நவீன ரக ஸ்கேனர்கள் மூலம் சிகிச்சை வழங்குவதனூடாக புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நாட்டில் ஒரே ஒரு அரச மருத்துவமனைக்கு வரும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.