'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் அரங்கேற்றம்

செப்டம்பர் 14, 2019

இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களினால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்ச்சியான 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் இன்று மாலை (செப்டம்பர், 14) அரங்கேற்றம் பெற்றது.

பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மத்தியில், உள்ளூர் இசை துறையில் பிரசித்திபெற்ற மற்றும் சிறந்த பாடகர்களை உள்ளடக்கிய கலைஞர்கள் குழுவினருடன் இவ் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

சிரேஷ்ட மற்றும் புதிய கலைஞர்கள் பங்கேற்புடன் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இசை நிகழ்வுகளில் ஒரு சிறந்த இசை நிகழ்ச்சி இதுவாகும்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அதேவேளை, சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி, திருமதி சோனியா கோட்டேகொட ஆகியோர் வரவேற்றனர்.

இங்கு வரவேற்புரை நிகழ்த்திய திருமதி. சோனியா கோட்டேகொட அவர்கள் இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும் மற்றும் இதன்மூலம் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பெரும் அனுகூலங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு தேவையான நிதியினை திரட்டும் வகையில் இவ் இசை நிகழ்ச்சியை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினர் ஏற்பாடுசெய்திருந்தனர். விருந்தோம்பல் முகாமைத்துவம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் தொழில்முறை பயிற்சியை வழங்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சோனியா கோட்டேகொட அவர்களின் கருத்திதடத்தின் கீழ் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப் படுகின்றது.

இவ் இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர்களும், கலைத்துறை பிரபலங்களுமான சுனில் எதிரிசிங்க, எட்வர்ட் ஜெயகோடி, சரிதா பிரியதர்ஷனி, கீர்த்தி பாஸ்கல், டி.எம். ஜெயரத்ன, சுஜாதா அத்தநாயக்க, தனபால உடவத்த, தீபிகா பிரியதர்ஷினி, பாத்தியா ஜெயகொடி, சந்தூஷ் வீரமான், லதா வல்பொல, உமரியா சின்கவங்ஷ, தனுஷா திசாநாயக்க மற்றும் சங்க தினேத் ஆகியோர் கலந்துகொண்டதுடன், முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் இசை கலைஞர்கள் குழுவினரும் பங்கேற்று இவ் இசை நிகழ்வினை மேலும் மெருகூட்டினர்.

'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி திட்டத்திற்கு எல்.ஓ.எல்.சி ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, இலங்கை காப்புறுதி நிறுவனம், ஹேலிஸ் அட்வாண்டிஸ் லிமிடெட், லாப்ஸ் கேஸ் பி.எல்.சி, சிலோன் பத்திரிகை நிறுவனம், டப்யூ.டி.எஸ் குரூப் மற்றும் மாநகர அபிவிருத்தி தொடர்பாடல் நிறுவனம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கியதுடன், தனிப்பட்ட நன்கொடையாளர்களான திரு. மதுர விக்ரமரத்ன, திரு. சுரேஷ் பெர்னாண்டோ, திரு. சாண்டி மற்றும் திரு. ரொகான் அதுரேலிய ஆகியோரும் சுயமாக முன்வந்து முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் இத்திட்டத்திகு தமது ஒத்துழைப்புக்கள் மற்றும் தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், திரு. என் கே ஜி கே நெம்மவத்த, அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் தளபதி, முப்படை தளபதிகள், முன்னாள் தளபதிகள், விஷேட அழைப்பினை ஏற்று அருகி தந்த பலரும் கலந்துகொண்டனர்.