“தாமரைக் கோபுரம்” ஜனாதிபதியினால் கோலாகலமாக திறந்து வைப்பு

செப்டம்பர் 16, 2019

நாட்டின் நவீன வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாகவும், தெற்காசியாவின் அதி உயர்ந்த தொலைத் தொடர்பு கோபுரமாகவும் திகழும்  “தாமரைக் கோபுரம்” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்றுமாலை (செப்டம்பர், 16) இடம்பெற்ற நிகழ்வின்போது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் வரவேற்றார்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவரான  பாதுகாப்பு செயலாளர் அவர்கள் இங்கு வரவேற்புரை நிகழ்த்தினார்.

சுமார் 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 356 மீற்றர் உயரம்கொண்டதாக இத் தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக் கோபுரத்தில் வானொலி நிலையங்கள்,  தொலைக்காட்சி நிலையங்கள், மற்றும்  தொலைத்தொடர்பு நிலையங்களுக்குக்கான வசதிகளுடன் ஹோட்டல்கள் மற்றும் வரவேற்பு மண்டபம், பார்வையாளர் மண்டபம் உட்பட பல்வேறு வசதிகளுடன் காணப்படுகிறது. மேலும், சுமார் 90 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தின் மேற்புறத்தில் உள்ள ‘அண்டெனா மாஸ்ட்’ மூலம் 20 தொலைக்காட்சி அலைவரிசைகள், 50 எப்எம் வானொலி நிலையங்கள், மற்றும் தொலைத்தொடர்புகளுக்கு சேவைகளை வழங்கும் வகையிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்தின் புதிய சிறப்பு அடையாளமாக திகழும் இக்கோபுரத்தின் சிறப்பம்சங்களின் ஒன்றாக மொட்டு வடிவ பகுதியின் ஐந்தாவது தளத்தில் புதிய சுழலும் உணவகம் காணப்படுவதுடன்,  தரையில் இருந்து 244 மீட்டர் உயரத்தில் உள்ள கண்காணிப்பு தளத்தில் மக்கள் பல காட்சிகளை கண்டுகளிக்கவும் முடியும்.

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் அதிமேதகு செங் சூயுவான் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது. தாமரைக் கோபுரத்திட்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.lotustower.lk ) ஒன்றும் இதன்போது ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வை குறிக்கும் வகையில் நினைவு முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இத் தாமரைக் கோபுரம் நிர்மாண பணிகளுக்கு சீனாவின் எக்சிம் வங்கி மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியன நிதியுதவி வழங்கியுள்ளன.

இந்நிகழ்வில், சபாநாயகர் கௌரவ. கரு ஜயசூரிய, அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்கள், சிரேஷ்ட உயர் அதிகாரிகள், இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் உட்பட விஷேட அழைப்பினை ஏற்று வருகை தந்த பலர் கலந்துகொண்டனர்.