இந்து - லங்கா கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின

செப்டம்பர் 16, 2019

இம்மாதம் (செப்டம்பர்) 05ம் திகதி இந்து -  லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற இரண்டு கடற்படை கப்பல்களும் நாடு திரும்பியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற கூட்டுப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான எஸ்எல்என்எஸ் “சிந்துறால” சனிக்கிழமை (14)  திருகோணமலை கடற்படை தளத்திற்கும், எஸ்எல்என்எஸ் “சுரநிமில” ஞாயிற்றுக்கிழமை (15) கொழும்பு துறைமுகத்தையும் வந்தடைந்தன. இவ்விரு கப்பல்களையும் கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி  வரவேற்றனர்.

இம்மாதம் 07ம் திகதிமுதல் 12ம் திகதிவரை இந்தியாவின் விசாக்காபட்டனத்தில் இடம்பெற்ற  இருநாடுகளுக்கிடையிலான கூட்டுப்பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் “குக்ரி” மற்றும் ஐஎன்எஸ் “சுமேதா”  ஆகியவற்றுடன் இலங்கை கப்பல்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்து -  லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கடற்படை பணிகள், கப்பல் பயணம், தொடர்பாடல், கப்பல்களுக்கிடையில் நபர்கள் மற்றும் பொருட்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் ஹெலிகொப்டர் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பயிற்சி விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.