மழையுடனான காலநிலை தொடரும்

செப்டம்பர் 17, 2019

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு பூராகவும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதுடன், குறிப்பாக தென் மற்றும் மேல் மாகாணங்களில் இந்நிலைமை தொடரும் சாத்தியம் காணப்படுவதாகவும் இன்று (17) பகல் வளி மண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய வடக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், மத்திய, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், கடல் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை நாடுபூராகவும் கடல் பிரதேசங்களில் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மேலும் நாட்டின் சிலபகுதிகளில் காற்றின் வேகம்  50-55 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.