2019 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி -X ' நடவடிக்கைகள் நிறைவு

செப்டம்பர் 24, 2019

இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சியின் இறுதிக்கட்ட பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் ‘விமர்சன ஈடுபாட்டுடன்’ அரங்கேற்றப்பட்டு நேற்று (செப்டெம்பர், 23)வெற்றிகரமாக நிறைவுற்றது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் சீ விஜேகுனரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மூன்று வார காலப்பகுதிகளைக் கொண்ட இப்போர் பயிர்சி இம்மாதம் (செப்டம்பர்) 03ஆம் திகதி ஆரம்பமானதுடன், இப்பயிற்சியில் 2400 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள்  மற்றும் 200 விமானப்படை வீரர்கள் உட்பட பத்து நாடுகளிலிருந்து 80ற்கும் மேற்பட்ட   வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள்  பங்கேற்றுள்ளனர்.

திருகோணமலை, கண்டி, புல்மோட்டை, நிலாவெளி, கொழும்பு, சிகிரியா, கோமரங்கடவல, வடுமுனை, மன்னார், பலபிட்டிய, மற்றும் நுவரெலியா உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இக்களமுனை போர் பயிற்சியின்  ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ் இறுதி களமுனை தாக்குதல் பயிற்சியின்போது, எதிரிகளின் மறைவிடங்கள் மீது கடல் மற்றும் தரைவழி ஊடான கூட்டுத் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.

இக்களமுனை போர் பயிற்சியின் இறுதிக்கட்ட நிகழ்வினை பார்வையிடுவதற்காக முப்படை தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் பலரும் வருகைதந்திருந்தனர்.