வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படையினர் உதவி

செப்டம்பர் 27, 2019

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் நாட்டின் அனேகமாக இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவிக்கப்படுகிறது.  இதன் பிரகாரம்  முப்படையினரின் மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழையின் காரணமாக பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் உள்ள பாலங்கள் குப்பை கூளங்களால் அடைக்கப்பட்டு காணப்படுவதால் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு தடையாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக மழை குறைந்துள்ள நிலைமையிலும் வெள்ளம் தொடர்வதற்கான நிலைமை காணப்படுகிறது.

இந்நிலைமையை தடுக்கும் வகையில், இலங்கை கடற்படையினர் வெள்ளம் காரணமாக  காலி வக்வெள்ள பாலத்தில் நிறைந்து காணப்பட்ட குப்பை கூளங்களை அகற்றும் பணிகளை (செப்டம்பர், 26) மேற்கொண்டுள்ளனர். குறித்த ஆறு இவ்வாறு குப்பை கூளங்களால் தடைப்பட்டு காணப்பட்டதால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மேலும், கடற்படையின் சுழியோடிகள் மற்றும் மரைன் ஆகிய இரு பிரிவுகள் அடைக்கப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் கூளங்களை அகற்றி ஆற்றின் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான வழிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடலோர பாதுகாப்பு படை குழுவினர்  மாத்தறை மாவட்டத்தின் மலிம்பட, திஹகொட, கனங்கே மற்றும் வலிபிட்டிய ஆகிய பகுதிகளில்  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.