போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்கள் சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு…..
செப்டம்பர் 27, 2019750 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க, போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்களை சீனா அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன், அவற்றை சீன தூதுவர் Chang Xueyuan இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
ஜனாதிபதி அவர்களின் கோரிக்கைக்கமைய இந்த அதிநவீன உபகரணம் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இத்தகைய நவீன உபகரணங்களை போதைப்பொருள் தேடுதல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை பாதுகாப்பு துறையினர் உபயோகிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
05 மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் நபர்கள் அல்லது பொருட்களுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை தன்னிச்சையாக இனங்கண்டுகொள்வதற்காக தயாரிக்கப்பட்ட விசேட ரோபோ இயந்திரங்கள் மூன்றும் இதற்குள் உள்ளடங்குகின்றன. இந்த ஒரு இயந்திரத்தின் பெறுமதி 85.5 மில்லியன் ரூபாவாகும்.
நபர்களால் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை தன்னிச்சையாக இனங்காண்பதற்காக தயாரிக்கப்பட்ட 90.5 மில்லியன் ரூபா பெறுமதியான Explosive Detector இயந்திரங்கள் மூன்றும் இந்த இயந்திரங்களுள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பயணப் பொதிகள் உள்ளிட்ட பொதிகளில் மறைத்து வைக்கப்படும் வெடிபொருட்களையும் போதைப்பொருட்களையும் இனங்காணும் விசேட உபகரணமான X-Ray Security Inspection System ஐம்பதும் இவற்றுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஒரு இயந்திரத்தின் விலை 4.2 மில்லியன் ரூபா பெறுமதியைக் கொண்டுள்ளதுடன், அவற்றின் மொத்தப் பெறுமதி 210.5 மில்லியன் ரூபாவாகும்.
ஆயுதங்களை உடனடியாக இனங்காணும் ஆற்றலுடைய 25 Walk Through Safety Inspection Gates இயந்திரங்களையும் சீன அரசாங்கம் இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளதுடன், அவற்றின் மொத்தப் பெறுமதி 6.5 மில்லியன் ருபாவாகும்.
வாகனங்களை ஸ்கேன் செய்து அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை பரிசோதிக்கும் அதிகாரிகள் அவற்றை உடனடியாக இனங்காண்பதற்கான ஆற்றலுடைய 3.2 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 25 Hand Held Vehicle Scanners இயந்திரங்களும் இவற்றுள் உள்ளடங்குகின்றன.
நபர்களிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை உடனடியாக இனங்காணும் ஆற்றலுடைய 2.75 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 500 Hand Held Metal Detector இயந்திரங்களும் பாதுகாப்பு துறையின் பயன்பாட்டிற்காக சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் விசேட தூதுக்குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நன்றி: pmdnews.lk