புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டங்கள் முன்னெடுப்பு

செப்டம்பர் 28, 2019

அண்மையில் இலங்கை இராணுவத்தினாரல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான “சாதகமான அணுகுமுறைகள் மற்றும் மனப்பான்மை'' எனும் தொனிப்பொருளிலான ஐந்து நாள் கொண்ட தலைமைத்துவ பயிற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தலைமைத்துவ பயிற்சியானது இம்மாதம் (செப்டம்பர்) 20ஆம் திகதி  முதல் 26ஆம் திகதி வரை ஐந்து வெவ்வேறு இராணுவ நிறுவனங்களில் நடத்தப்பட்டதுடன், இவ்வதிவிட பயிற்சியில்  சுமார் 1139 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வித் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இப்பயிற்சியிகள் நடாத்தப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குறித்த ஆசிரியர்களுக்கு 'தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துதல்', 'சமூக ஒழுக்கம்', 'திறன் மேம்பாடு', 'சவால்களுக்கு எதிரான மன எழுச்சி' மற்றும் ' தேக ஆரோக்கியம்' போன்ற பல தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

குறித்த பயிற்சி நிகழ்வுகள், மின்னேரிய காலாட்படை பயிற்சி மையம் (120), பீரங்கி பயிற்சி கல்லூரி (215), இலங்கை சின்க ரெஜிமென்ட் படைப்பிரிவு மையம், (410), கஜாபா ரெஜிமென்ட் படைப்பிரிவு மையம், (259) மற்றும் கலேத்தேவ கவச படைகள் பயிற்சி மையம் ( 135) ஆகிய நிலையங்களில் இடம்பெற்றன.