இராணுவத்தின் 70 வது ஆண்டு விழா புனித தலதா மாலிகையில் மத வழிபாடுகளுடன் ஆரம்பம்

செப்டம்பர் 29, 2019

இலங்கை இராணுவம்  தனது  70  ஆவது ஆண்டு நிறைவு தினத்தை அடுத்த மாதம் 10ம் திகதி கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு இராணுவத்தின் கொடிகளுக்கு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் தொடர்ச்சியானதொரு மத நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதற் கட்ட நிகழ்வு  கண்டி புனித தலதா மாளிகையில் சனிக்கிழமையன்று (செப்டம்பர், 28) இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் போதி பூஜை, அன்னதானம் வழங்கல் மற்றும் இராணுவத்தின் கொடிகளுக்கு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இதன்போது, மல்வத்த பீடத்தின் வணக்கத்திற்குரிய திபொத்துவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரியா பீடத்தின்  வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர் ஆகியோர் தலைமையில் மகா சங்கத்தின் 70 உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

கொடிகளுக்கு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு புனித தலதா மாளிகையின்  உட்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், இராணுவ பிரதானி, மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, சிரேஷ்ட் இராணுவ அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான இராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.