அதிக மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமையை அடுத்து அடைபட்ட பாலங்கள் கடற்படையினரால் சுத்திகரிப்பு
செப்டம்பர் 30, 2019சீரற்ற வானிலை காரணமாக கடந்த வாரத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியினால் பல நதிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் தற்காலிக வெள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது. வடிந்துவரும் வெள்ள நீருடன் சேர்ந்து சாக்கடைச்சேறு, குப்பைகள் மற்றும் கழிவுபொருட்கள் ஆகியன சேர்ந்து பாலங்களுக்கு கீழ் அடைப்புக்குள்ளாகியுள்ளதனால் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் வெள்ள அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன.
இதற்கமைய, குப்பைகள் மற்றும் கழிவுபொருட்கள் சேர்ந்து அடைப்புக்குள்ளாகியிருந்த தொடங்கொட மற்றும் வக்வெள்ள பாலங்களை இலங்கை கடற்படை வீரர்கள் நேற்றயதினம் (செப்டம்பர், 29), சுத்தம் செய்தனர்.
மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக கிண் கங்கையிலும் அதிகளவான குப்பைகள் நிறைந்துள்ளமை காரணமாக இந் நதிக்கு குறுக்காக கட்டப்பட்டுள்ள பாலங்களினூடாக நீர் செல்ல முடியாத வகையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பிரதேசத்தை சுத்தப்படுத்தும் பணிகளில் கடற்படை வீரர்கள் மற்றும் சுழியோடிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், தென் மாகாணத்திலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் காலை வேளையிலும், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.