வெளிநாட்டு கலாச்சார களியாட்ட களிப்பில் கிளிநொச்சி மக்கள்

செப்டம்பர் 30, 2019

கிளிநொச்சியில் உள்ள பொதுமக்களுக்கு வெளிநாட்டு கலை கலாச்சார நிகழ்வுகள் தொடர்பான  அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப்படை வீரர்களினால்  ‘சீனாவின் ஹூபே பாரம்பரிய இசை மற்றும் நடனம்’ எனும் கலாச்சார நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கைக்கான  சீனத் தூதரகம் மற்றும் இலங்கையில் உள்ள சீனாவின் கலாச்சார மையம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க சுமார் 1000ற்கும் மேற்பட்ட  பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் வருகை தந்திருந்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி ‘நெலும் பியச’ கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர், 27) நடைபெற்ற இந் நிகழ்வானது இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும்  இடையிலான நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கண்ணைக் கவரும் வண்ணமயமான நிகழ்வில்  சீன இசை மற்றும் நடனம், தற்காப்பு கலை நிகழ்ச்சிகள், சீனாவின் ஹூபே மாகாணத்தினை பிரதிபலிக்கும்  கலை மற்றும் புகைப்பட கண்காட்சிகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில்  கிளிநொச்சி பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் ஜி.வி.ரவிப்ரிய, முல்லைதீவு மாவட்ட செயலாளர் திருமதி ஆர்.கீதீஸ்வரன் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.