இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் பாராட்டு

ஒக்டோபர் 03, 2019

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலினால் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில் நல்லிணக்க செயற்பாடுகளை வலுவூட்டுவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களை பொதுநலவாய நாடுகள், ஐக்கிய நாடுகள் மற்றும் தெற்காசியா தொடர்பிலான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் விம்பிள்டன் பிரபு தரிக் அஹமட் (Lord Tariq Ahmed of wimblendon) பாராட்டினார்.

உலகளாவிய அச்சுறுத்தலாக தோற்றம் பெற்றுள்ள அனைத்துவிதமான பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் எதிராக போராடுவதற்கான சர்வதேச பங்களிப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

குறுகிய சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அஹமட் பிரபு நேற்று (01) கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

தீவிரவாத சிந்தனையைக் கொண்டவர்களின் வன்முறை செயற்பாடுகளை மதங்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்றும் அஹமட் பிரபு இங்கு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு நிலைமைகளை பலப்படுத்துவதற்கும் பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதிகளின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து விசாரணை செய்வதற்கும் இலங்கை புலனாய்வு துறைக்கும் பொலிஸாருக்கும் வழங்கிய ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார்.

பொதுநலவாய அமைப்பினால் நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் அபிவிருத்தி உதவிகளை ஜனாதிபதி அவர்கள் இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்ததுடன்,  பொதுநலவாய அமைப்பு என்பது தனிப்பட்ட பொது பெறுமானங்கள் மற்றும் வரலாற்று பிணைப்பைக்கொண்ட ஒரு வலையமைப்பாகுமென அஹமட் பிரபு தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் போன்ற சுற்றாடல் பிரச்சினைகளுக்கு உதவும் இயலுமை பொதுநலவாய அமைப்புக்கு உள்ளதாகவும் பிரித்தானிய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk