கடலோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் கடலோர பாதுகாப்பு படையினரால் முன்னெடுப்பு
ஒக்டோபர் 04, 2019கடலோர பகுதிகள் மற்றும் கடல்சார் சூழலைப் பாதுகாப்பது தனது செயற்பாடுகளில் ஒரு பகுதியாக கருதி, இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர சுற்றுச்சூழல் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை அண்மையில் முன்னெடுத்துள்ளனர். குறித்த நிகழ்வானது, சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு அதன் பிராந்திய பணியகங்களினால் கடந்தவாரம் பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம் இலங்கை கடலோர காவல்படை பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் சமந்த விமலத்துங்க அவர்களின் வழிகாட்டல்களுக்கமைய மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய பணியகங்களின் அனைத்து கடலோர பாதுகாப்பு தளங்களையும் அண்மித்த கடலோரப் பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் கடல்சார் சூழலானது மனித தலையீட்டினால் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. கடலோரப் பகுதிகளின் துரித நகரமயமாக்கல் காரணமாக முறையற்ற விதத்தில் வீட்டு மற்றும் தொழிற்சாலை கழிவுகள், குப்பைகள் மற்றும் ஏனைய தின்ம மற்றும் திரவப் களிவுகள் கடல் பிரதேசங்களில் அகற்றப்படுவதானது கடலோரப் பகுதிகள் மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது.
இலங்கை கடலோர பாதுகாப்பு படையானது, கடலோர சூழலைப் பாதுகாப்பதில் ஒரு பங்குதாரர் என்ற வகையில் கடலோர பகுதியில் வாழும் சமூகங்களுக்கு பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொள்வதுடன், ஏனைய பங்குதாரர்களுக்கும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதன் மூலம் கடலோர சூழல் மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.