கடலோர பாதுகாப்புபடை அவுஸ்திரேலியாவின் விக்டோரியா உயிர்காப்பு பிரிவுடன் இணைந்து உயிர்காப்பு பயிற்சி முன்னெடுப்பு
ஒக்டோபர் 09, 2019அண்மையில் இலங்கை கடலோர பாதுகாப்புபடை நான்கு நாள் உயிர்காப்பு பயிற்சி ஒன்றினை முன்னெடுத்துள்ளது. இப்பயிற்சியானது, இலங்கை கடற்படை, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா உயிர்காப்பு பிரிவு மற்றும் இலங்கை உயிர்காப்பு பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இலங்கை கடலோர பாதுகாப்புபடையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மிரிஸ்ஸவில் உள்ள கடலோரக் பாதுகாப்பு படையின் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இப்பயிற்சியில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், பாடசாலைகள், சங்கங்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை ஆகியவற்றிலிருந்து சுமார் 120 க்கும் அதிகமான உயிர்காப்பாளர்கள் கலந்து கொண்டதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நீரலையில் அடித்து செல்லப்படுவதை தடுப்பதற்கான முயற்சியை ஆதரித்தும் நாட்டில் உயிர் பாதுகாப்பாளர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் கடற்கரை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, மீட்பு படகு ஓட்டுனருக்கான பயிற்சி, கடல் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் பெண்களின் உயிர்காக்கும் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் தொடர்பாக கவனம்செலுத்தப்பட்டன.
மேலும், இப்பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் விக்டோரியா உயிர்காப்பு பிரிவினால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், இலங்கை கடலோர பாதுகாப்புபடையின் பிரதி பணிப்பாளர் நாயகம், கொமடோர் வைஎம்ஜிபி ஜயதிலக மற்றும் சர்வதேச உயிர்காப்பு கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் தலைவர் திரு. நோர்மன் பாமெர் ஆகியோர் கலந்துகொண்டனர்.