சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்

ஒக்டோபர் 11, 2019

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட சுகவீனம்  காரணமாக மீனவர் ஒருவர்  கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார். இம்மீனவர் கடந்த வாரம்  'சஜென் புதா 1' மீன்பிடி படகின் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு   மீன்பிடி துறைமுகத்திலிருந்து  புறப்பட்டுச் சென்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையினரிடம்  விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக   சுகயீனமுற்ற நீர்கொழும்பை வசிபிடமாக கொண்ட  20 வயதுடைய  மீனவரை கரைக்கு கொண்டுவருவதற்காக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டது.

காலி கலங்கரை விளக்கிலிருந்து  இருந்து சுமார்  47 கடல் மைல் தொலைவில்  இம்மீன்பிடி படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் பகுதிக்கு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகு  மீட்பு பணிக்காக விரைந்தது. கடற்படையின் மருத்துவ குழாமினால் முதல் உதவி அளிக்கப்பட்ட குறித்த மீனவர்  மேலதிக  சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய  போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.