“கோல் டயலொக் -2019” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு இம்மாதம்

ஒக்டோபர் 16, 2019

“கோல் டயலொக் - 2019” எனும் வருடாந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு இம்மாதம் (ஒக்டோபர்) 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளது.  இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இவ்வருட கலந்துரையாடல்கள் “"நாடுகடந்த கடல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்தல்: தசாப்தத்தின் ஒரு மீளாய்வு"” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளதாக கொழும்பு கடற்படை தலைமையகத்தில் நேற்று மாலை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற உள்ள வருடாந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க உள்ளார்.

பத்தாவது தடவையாகவும் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் 55 நாடுகள், 10 சர்வதேச நிறுவனங்கள் மற்றும் 3 பாதுகாப்பு துறைகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “கோல் டயலொக்” கலந்துரையாடல், பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு கலந்துரையாடலில் ஒரு முக்கிய நிகழ்வாக இன்றுவரை திகழ்கிறது. மேலும் இம்மாநாடு தேசிய மற்றும் சர்வேதேச பங்காளர்களின் கடல்சார் பிரச்சினைகள் தொடர்பாக குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் தொடர்பான தகவல்கள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்குரிய ஒரு சிறந்த தளத்தினை உருவாக்கியுள்ளது.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில், கடற்படை அதிகாரிகளின் பிரதானி, ரியர் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன தலைமை வகித்த அதேவேளை, பிரதி கடற்படை அதிகாரிகளின் பிரதானி மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம்,  ரியர் அட்மிரல் நிராஜா ஆட்டிகல மற்றும் கடற்படை ஊடக பேச்சாளர், லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார ஆகியோரும்  கலந்துகொண்டனர்.

கடந்த வருட “கோல் டயலொக் -2018” மாநாடு “கடல்சார் முகாமைத்துவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.