--> -->

யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

ஒக்டோபர் 17, 2019

இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் பிரதமர், கௌரவ. ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (ஒக்டோபர், 17) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக திகழ்கிறது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் கலந்துகொண்டார். மேலும் செயலாளர் அவர்கள், இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபையின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் காணப்படுகின்றார்.

இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம், பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு 2,250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசின் சுமார் 1,950 மில்லியன் ரூபா நிதியும் இந்திய அரசின் சுமார் 300 மில்லியன் ரூபா நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போது விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீற்றர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. யாழ் சர்வதேச விமான நிலையத்தின் நாளாந்த விமான சேவைகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில்,  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர், அர்ஜுன ரணதுங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், அதிமேதகு திரு. தரஞ்சித் சிங் சந்து,  வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள்,  ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, இராணுவத்தளபதி, சிரேஷ்ட அரச அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், சிவில் விமான சேவைகள் அதிகாரிகள் மற்றும் விஷேட அதிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.