“கோல் டயலொக் -2019” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் ஆரம்பம்
ஒக்டோபர் 21, 2019இலங்கை கடற்படையின் பத்தாவது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடான “கோல் டயலொக் - 2019” இன்று (ஒக்டோபர், 21) ஆரம்பமானது.
இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் இரண்டு நாட்கள் நடைபெறும் இச் சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பிரதம அதிதியினை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் வரவேற்றார்.
இம்முறை நடைபெறும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு, “நாடுகடந்த கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்குதல்: ஒரு தசாப்தத்தின் மீளாய்வு” எனும் தொனிப்பொருளில் இடம்பெருகின்றது.
அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள், இன்றைய நாட்களில் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயலாற்றுதல் ஆகியன ஒரு யதார்த்தமான அணுகுமுறையாக மாறியுள்ளது, மேலும் பல்வேறு ஆர்வமுள்ள தரப்பினர் வர்த்தகம், பாதுகாப்பு போன்றவற்றில் தமது சகாக்களுடன் பரஸ்பர உடன்படிக்கை மேற்கொள்ளுதல், ஒன்றிணைந்து செயற்படுதல் என்பவற்றிற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றன. இந்தப் பின்னணியில், நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் கடல்சார் பங்குதாரர்கள் கடல் பாதுகாப்பை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இந்துசமுத்திர பிராந்தியமும் அமைவிடமும் தற்கால மற்றும் எதிர்கால கடல் விவகாரங்களை தீர்மானிக்கும் மற்றும் செல்வாக்கு செலுத்தும் காரணியாக உருவெடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.
சமுத்திரங்கள், அண்டியுள்ள நாடுகளின் அழியா வளங்களாகவும் , புதிய வாழ்வாதார ஆதாரங்களைத் தேடுவதில் மனிதகுலத்தின் நம்பிக்கையாகவும் உள்ளன.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் அமைவிடம், கிழக்கு மற்றும் மேற்கின் கடல் பாதையில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் கடல் வரலாற்றில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் அதன் அளவுடன் ஒப்பிடும்போது மிகப் பெரியதாகும் என தெரிவித்த அவர் நாடுகடந்த அச்சுறுத்தல்கள் இந்துசமுத்திர பிராந்தியத்தின் முக்கிய பாதுகாப்பு பிரச்சினைகளில் ஒன்றாக மாறி வருகின்றன, இது இந்து சமுத்திரத்தில் முக்கிய கடல் பாதைகளின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இந்து சமுத்திரத்தில் இந்த தனித்துவமான வர்த்தகத்தையும் சுற்றுலாவையும் ஊக்குவிப்பதன் மூலம் இந்து சமுத்திரத்தில் நமது கடல் மகிமையை மீண்டும் பெறுவதற்கான எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம்.
சுதந்திர போக்குவரத்து விழுமியம் , இந்து சமுத்திரனூடான சுமூகமான வர்த்தகம் என்பவற்றில் ஒவ்வொரு அமைதியான தேசமும் கடைப்பிடிக்கும் பொதுவான விதிமுறையாக இலங்கை அங்கீகரிக்கிறது. எனவே, இந்த முக்கியமான ஊடுருவல் சுதந்திரத்தையும், வர்த்தகம் மற்றும் ஆற்றலின் சீரான ஓட்டத்தையும் பாதுகாக்க உதவும் எந்தவொரு முயற்சியிலும் இலங்கை பங்கேற்கும். அவ்வாறு செய்யும்போது, எங்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் வலியுறுத்தினார்.
கடல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை தனிமையில் கையாள எந்த நாடும் இல்லை என தெரிவித்த அவர் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் உலகளவில் சிந்தித்து கட்டமைக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு பொறிமுறையில் ஈடுபடுவதே தற்போது தேவையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “கோல் டயலொக் -2019” ஆனது இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும் ஒரு பொதுவான மனநிலையை அமைப்பதற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் ஒரு மன்றமாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். மேலும் இந்த முயற்சியானது எதிர்காலத்தை தயார் செய்வதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பங்குதாரர்களின் அனுபவங்களின் அடிப்படையில் நாடுகடந்த கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் “மனநிலையை” உருவாகியது எனவும் அவர் குரிப்பிட்டார்.
இந்நிகழ்வின் அங்குரார்ப்பண உரையின் பின்னர் ஜனாதிபதியின் ஆசிச் செய்தியை இலங்கை கடற்படைத் தளபதி வாசித்தார்.
சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டின் முதல் அமர்வில் கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளரினால் நினைவுச் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இம்முறை இம்மாநாட்டில் இலங்கை கடற்படையினரின் அழைப்பின்பேரில் 54 நாடுகள், பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு துறைகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் கடல்சார் பாதுகாப்பு, கப்பல் மற்றும் பொருளாதாரம், பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் (HADR) ஆகிய பின்வரும் தலைப்புகளின் கீழ் அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அட்மிரல் ஒப் தி பிளீட் வசந்த கரன்னாகொட, ஜனாதிபதயின் செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, இராணுவத் தளபதி, விமானப் படைத் தளபதி, முன்னாள் தளபதிகள், விஷேட அதிரடிப்படையின் கொமடான்ட் , கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோல் டயலொக் -2019 தொடர்பான மேலதிக விவரங்களுக்கு, பின்வரும் இணைப்பில் உள்நுழைக: www.galledialogue.lk