வடபகுதி மானவர்களுக்கு இராணுவத்தினர் உதவி
ஒக்டோபர் 23, 2019இவ்வருட இறுதியில் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு கற்றல் உதவிகள் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 900ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு, புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் இம்மாதம் 17ஆம் 18ஆம் இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ஆங்கிலம், வரலாறு, விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களினால் விரிவுரைகள் அளிக்கப்பட்டன.
மேலும், கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களின் நலன்கருதி அவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் சிற்றுண்டி ஆகியனவும் வழங்கப்பட்டதுடன் கருத்தரங்கை நடாத்திய ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு தென்னங்கன்றுகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நன்கொடையாக வழங்கும் திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர்,20) யாழ் கருகம்பனை கலாச்சார மையத்தில் இடம்பெற்றது.