‘கேம்ப்ரியன் ரோந்து பயிற்சி நடவடிக்கை - 2019’ போட்டியில் இலங்கை இராணுவ விஷேடபடை அணிக்கு பாராட்டு...
ஒக்டோபர் 24, 2019இங்கிலாந்தில் நடைபெற்ற பிரிட்டிஷ் இராணுவத்தின் சர்வதேச ‘கேம்ப்ரியன் ரோந்து பயிற்சி நடவடிக்கை - 2019’ போட்டியில் பங்கேற்ற இலங்கை இராணுவத்தின் விஷேடபடை அணி குழுவினர் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தனர். கடந்த வாரம் இங்கிலாந்தின் மிட் வேல்ஸில் நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தின் விஷேடபடை அணியின் மூன்று அதிகாரிகள் மற்றும் ஏழு படை வீரர்கள் பங்கேற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கேம்ப்ரியன் ரோந்து பயிற்சி நடவடிக்கை' பிரித்தானிய இராணுவத்தின் முதற்தர ரோந்து பயிற்சி நிகழ்வாக உள்ளதுடன் உலகின் கடினமான பயிற்சி நிகழ்வுகளில் ஒன்றும் ஆகும். இப்போட்டிகள் 160 வது (வெல்ஷ்) தலைமையக படைப்பிரிவால் வேல்ஸ் நகரில் நடத்தப்பட்டது. இப் பயிற்சி போட்டிகள் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில் சவாலான ரோந்துப் பயிற்சியை வழங்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுவருகின்றது.
இங்கிலாந்தில் குளிரான காலநிலை நிலைமைகள் நிலவுகின்றபோதும் இலங்கை இராணுவத்தின் விஷேடபடை அணி செவ்வாய்க்கிழமை சவாலான பயிற்சியைத் தொடங்கி வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக முடித்து வெண்கல பதக்கத்தை வென்றது.
பிரிட்டிஷ் படையின் 160 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி, ஏ.எஸ். ரிச்மண்ட் மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (பாதுகாப்பு) பிரிகேடியர் ஸ்வர்ண போத்தோட்ட ஆகியோர் இணைந்து இலங்கை இராணுவத்தின் விஷேடபடை அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கி வைத்தனர்.