“கொழும்பு வான் ஆய்வரங்கு -2019” ஆரம்பம்...

ஒக்டோபர் 24, 2019

இலங்கை விமானப்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச மாநாடான  “கொழும்பு வான் ஆய்வரங்கு - 2019” இன்று (ஒக்டோபர், 24) அத்திட்டிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

 இரண்டு நாட்கள் நடைபெறும் இச் சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான  கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இன்று காலை ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பிரதம அதிதிகளை  விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் வரவேற்றார்.

விமானப்படையின் மாநாட்டு வரிசையில் 5வது வருடமாகவும் இடம்பெறும்  இரண்டு நாட்களைக் கொண்ட இவ்வருட ஆய்வரங்கு  'ஒரு சிறிய விமானப்படை: எதிர்கால இலக்கினை நோக்கி முன்னோக்கிச் செல்லும் வழி ”' எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.

இம்மாநாட்டில் இராணுவ தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உலகளாவிய சிந்தனைக் குழுக்கள் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட  பலர்  கலந்து கொள்கின்றனர்.   

விமானத் துறை வல்லுநர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும்  எதிர்கால தளத்துடன் வான் சக்தியைப் பயன்படுத்துவதற்கான பல அம்சங்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு உறுதியான தளத்தை அமைத்து கொடுக்கும் நோக்குடன்  கொழும்பு வான் ஆய்வரங்கு  2015 ஆம் ஆண்டு ஆரம்பமானது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிரசித்திபெற்ற  இராணுவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களால் கருப்பொருள் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் அடங்கிய  அமர்வுகள்  இடம்பெறவுள்ளன.

'ஒரு சிறிய விமானப்படை: எதிர்கால இலக்கினை நோக்கி   முன்னோக்கிச் செல்லும் வழி ”' எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இவ்வருட ஆய்வரங்கு,  எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பு விடயங்கள் மற்றும்  புவி வெப்பமடைதல்,  இயற்கை பேரழிவுகள் போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மேற்கொள்ளும்போது  விமானப்படையின் பங்கு மற்றும் முக்கியத்துவம் எவ்வாறு அமையவுள்ளது என்பதை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறது.

இலங்கை விமானப்படையின் நான்காவது ஆய்வரங்கான  “கொழும்பு வான் ஆய்வரங்கு 2018”    'இலங்கையின் பூகோள -மூலோபாய முக்கியத்துவத்தை மேம்படுத்துவதில் வான்பல  வியூகம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.