மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

ஒக்டோபர் 28, 2019

இலங்கைக்கு தெற்காக தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக அதிக மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும், இந்நிலைமை இன்று தெற்கு கடல் பகுதி ஊடாக தீவின் மேற்கே கடல் பகுதியி வழியாக செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வானிலை தொடர்பாக இன்று காலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், (குறிப்பாக வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவமாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலை ஒக்டோபர்29ஆம் திகதி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தில் சில இடங்களிலும் 150-200 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்பட்டள்ளது.

நாடு முழுவதும் காற்றுடனான காலநிலை காணப்படுவதுடன், குறிப்பாக மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளில் (நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில்) மற்றும் தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகம் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது இவ்விடயம் தொடர்பாக மீனவ சமூகம் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகளின்போது உதவிகளை  பெற்றுக்கொள்ளும் வகையில் முப்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.