சிறுநீரக நோய்த்தடுப்பு மற்றும் நோயாளிகளின் நலன்பேணலுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிப்பு
ஒக்டோபர் 30, 2019சிறுநீரக நோய்த்தடுப்பு மற்றும் நோயாளிகளின் நலன்பேணலுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (29) முற்பகல் இடம்பெற்றது.
இது ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து தொலைத்தொடர்பு தொழிநுட்பத்தினூடாக மேற்கொள்ளப்பட்டது.
கிராந்துருக்கோட்டை மாவட்ட வைத்தியசாலையுடன் இணைந்ததாக 89 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோயாளிகளை வலுவூட்டும் பொருளாதார நலன்பேணல் கல்வித் தகவல் மையம் ஜனாதிபதி அவர்களினால் தொலைத்தொடர்பு தொழிநுட்பத்தினூடாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.
பதுளை மாவட்டத்தில் கிராந்துருக்கோட்டை பிரதேசம் சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள பிரதேசமாகும் என்பதுடன், அந்த நோயாளிகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஏனைய திட்டங்களுக்காக தனியான விசேட பிரிவொன்று இல்லாதிருந்தமை ஒரு பிரச்சினையாக இருந்து வந்தது. அக்குறைபாட்டை நிவர்த்திசெய்யும் வகையில் ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் இந்த மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளிகளின் உளச் சுகாதாரம் மற்றும் சமூக, பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தி நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக அவர்களது பங்களிப்பை பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாகும். வருடத்தின் 365 நாட்களும் நடைமுறைப்படுத்தப்படும் சிறுநீரக நோய் தொடர்பான தகவல்கள் மற்றும் கல்வி நிலையம் சிறுநீரக நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்குதல், நோயாளிகளின் உளச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், அதற்காக அவர்களை பயிற்றுவித்தல், உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதனூடாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதேநேரம் சிறுநீரக நோய்த்தடுப்பு ஜனாதிபதி செயலணியினதும் பல்வேறு நன்கொடையாளர்களின் நிதிப் பங்களிப்புடன் இலங்கை கடற்படையினரின் மனிதவள பங்களிப்புடன் அநுராதபுரம், புத்தளம், குருணாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 09 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொலைதொடர்பு தொழிநுட்பத்தினூடாக ஜனாதிபதி அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
மிகிந்தலை வேளுசுமண ரஜமகா விகாரை, பதவிய ருவன்புர மகா வித்தியாலயம், பலாகல கிரிந்திவத்த ஆரம்ப பாடசாலை, திரப்பனை அளகொல்லேவ புனித அந்தோனியார் வித்தியாலயம், மஹகும்புக்கடவல கிவுலக்கெலே மகா வித்தியாலயம், ஆனமடுவ கரம்பேவ ரஜமகா விகாரை, ஆனமடுவே விஹாரகம வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி மற்றும் குருணாகல் மலியதேவ முன்மாதிரிப் பாடசாலை, கண்டி தர்மராஜ கல்லூரி ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களே ஜனாதிபதி அவர்களினால் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன.
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பாரிய அனர்த்தமாக மாறியுள்ள சிறுநீரக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக விசேட கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி அவர்கள் சிறுநீரக நோய்த்தடுப்பு ஜனாதிபதி செயலணியை அமைத்ததுடன், இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சிறுநீரக நோய்த் தாக்கமுள்ள பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட குறுகிய காலத் தீர்வாக நீர் சுத்திகரிப்பு நிலையங்களை வழங்குதல் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டதுடன், 824 மில்லியன் ரூபா செலவில் நாடளாவிய ரீதியில் சுமார் 611 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,527,500 பேருக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர்.
இன்று இந்த புதிய திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்விற்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, சுகாதார அமைச்சு மற்றும் சிறுநீரக நோய்த்தடுப்பு ஜனாதிபதி செயலணியின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்குபற்றினர்.
நன்றி: pmdnews.lk