இராணுவ கண்ணிவெடியகற்றும் மோப்பநாய் மற்றும் கையாளுபவர் மார்ஷல் லெகஸி நிறுவனத்தினால் சிறந்த அணியாக தேர்வு

நவம்பர் 01, 2019

இலங்கை இராணுவத்தின்  கண்ணிவெடியகற்றும் பிரிவில் உள்ள  'சம்மி' எனும் மோப்பநாய்  மற்றும் அதனைக் கையாளும் 5வது களமுனை பொறியியிலாளர் படைப்பிரிவின் லான்ஸ் கோப்ரல் பிஜி நிஷாந்த பண்டார  ஆகியோர் வாஷிங்டனை தளமாகக்கொண்ட  மார்ஷல் லெகஸி நிறுவனத்தினால் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வணியினருக்கு   வாஷிங்டன் பயார்மௌன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற 'கிளியரிங் தி பாத்' எனும் நிகழ்வின்போது விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு வருடாந்த மதிப்பீட்டு போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த  கண்ணிவெடியகற்றும் அணிகள் பங்கேற்றன. இவ் அணிகள் சிறந்த நிபுணர்களை உள்ளடக்கிய  குழு ஒன்றினால் மதிப்பீடுசெய்யப்பட்டன. இராணுவ மனிதாபிமான  கண்ணிவெடியகற்றும் பிரிவு சர்வதேச ரீதியில் பாராட்டுக்களைப் பெறுவது இது 3 வது முறையாகும். 2016 ஆம் ஆண்டில், இராணுவத்தின் ‘ஆல்வின்’, வாஷிங்டனில் அதே விருதைப் பெற்றுக்கொண்டது. இராணுவத்தின்  கண்ணிவெடியகற்றும் பிரிவில் ‘சிரோ’ 2012ஆம் ஆண்டில் இவ்விருதை  தனதாக்கியிருந்தது.

பெல்ஜிய மலினாய்ஸ் இனத்தைச் சேர்ந்த  'சம்மி' மற்றும் லான்ஸ் கோப்ரல் பண்டாரா ஆகியோர் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  முதல்  கண்ணிவெடியகற்றும்  பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் மனிதன் மற்றும் நாய்  'இரட்டையர்', எம்.எல்.ஐ மற்றும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பிரிவின்  கூட்டாண்மை திட்டத்தின் கீழ்  வடக்கில் 113, 424 சதுர மீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். ஒரு கண்ணிவெடி (ரங்கன் 99), 403 டி -56 ரக துப்பாக்கி ரவைகள், 4 கைக்குண்டுகள், 4 வெடிபொருட்கள் 2 மின்சார டெடனேட்டர்கள் ஆகியவற்றை கண்டறிந்துள்ளதுடன் 435 குடும்பங்களைச் சேர்ந்த 1650 பேர் மீள தமது இடங்களுக்கு பாதுகாப்பாக குடியமர்வதற்கான வாய்ப்பையும் இக்குழுவினர் ஏற்படுத்தி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.