விமானப்படையினரால் லஹுகள வனப்பகுதியில் “ சீட் பம்ப்ஸ்” விதைப்பு

நவம்பர் 01, 2019

இலங்கை விமானப்படையினர் வன பாதுகாப்பு திணைக்களம், மாஸ் ஹோல்டிங் நிறுவனம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அம்பாறை லஹுகள வனப்பகுதியில் வான் வழியாக விதை குண்டுகளை இடும் அதன் இரண்டாவது நிகழ்வினை வாரத்தின் முதற்பகுதியில் ஆரம்பித்துள்ளனர். நாட்டின் செழுமையை அதிகரிக்கும் நோக்கத்தை அடைவதற்காக இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதேவேளை, அதன் முதற்கட்ட விதை குண்டுகளை இடும் நடவடிக்கைகள் ரனொரவ வனப்பிரதேசத்தில் ஐந்து ஏக்கர் நிலத்திற்கும் அதிகமான பகுதியில்  பெறுமதிவாய்ந்த மர இனங்களின் விதைகள் அடங்கிய சுமார் 5000 விதை குண்டுகள் இலங்கை விமானப்படையின் எம் ஐ 17 ரக விஷேட உலங்குவானூர்தி மூலம் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அம்பாறை லஹுகள வனப்பகுதியில் 67,000 விதை குண்டுகள் இடப்பட்டுள்ளது. இவ்வனப்பகுதியில் இலங்கை விமானப்படையின் அம்பாறை நிலையத்திலிருந்து சென்ற  எம் ஐ 17 ரக விஷேட உலங்குவானூர்தி மூலம் வெற்றிகரமாக “விதைகள்” வான் வழியாக இடப்பட்டது.

குறித்த இவ் வனப்பகுதிக்குள் வான் வழியூடாக மாத்திரமே இந்நடவடிக்கையினை மேற்கொள்ள முடியம். இலங்கை வன பாதுகாப்பு திணைக்களம் இதற்கான விதைகளை வழங்கி வைத்துள்ளதுடன், குறித்த விதை குண்டுகள் கடுக்காய் (டேர்மினலியா செபுலா), கோன் (ஸ்க்லீசெரா ஓலியோசா), பட்டுப் புளி  (டயலியம் ஓவொய்டியம்), புளி (தாமரிண்டஸ் இண்டிகா), ஆய மரம் (ஹோலோப்டீலியா இன்ட்ரிஃபோலியா), மற்றும் ஆத்தி (பஹினியா ரேஸ்மோசா) ஆகிய பெறுமதிவாய்ந்த மரங்களின் விதைகள் உள்ளடங்கியதாக இவ் விதை குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.