எசல பெரஹர வருடாந்த உத்சவத்திற்கான விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜூலை 29, 2019

கண்டியில் இடம்பெறவுள்ள வருடாந்த எசல பெரஹரவின் போது பொதுமக்கள் மற்றும் இருப்பிடங்களின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் முப்படை மற்றும் பொலிசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் விஷேட பணிப்புரை வழங்கியுள்ளதாக எசல பெரஹர இடம்பெறும் இடங்களில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்யும் விஷேட கலந்துரையாடலின்போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தெரிவித்தார். இவ்விஷேட கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் இன்று ( ஜூலை, 29) இடம்பெற்றது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், 10 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இக் கண்கவர் வரலாற்று கலாச்சார நிகழ்வின்போது பாதுகாப்பு வழங்குதல் மற்றும் பொதுமக்கள் மக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து அம்சங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. வரலாற்று சிறப்பு மிக்க மத்திய மலைநாட்டின் தலைநகரத்தில் வருடாந்தம் இடம்பெறும் இந்நிகழ்வினை கண்டுகளிக்க பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த பத்து நாட்கள் இடம்பெறும் எசல பெரஹர நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துரதிர்ஷ்டவசமான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து எழுந்த புதிய வடிவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த ஆண்டு ஒரு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும்.

இந்த ஆண்டு நடைமுறையில் உள்ள சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கென பொலிஸ் , முப்படை , விஷேட அதிரடிப்படை ஆகியன இணைந்து தமது சொந்த உளவுபிரிவு மற்றும் பிற ஆயுத அணிகளை ஈடுபடுத்தியுள்ளன.

வீதி தடைகளுடன் நகரத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் நிலையான கண்காணிப்பு தொடந்து முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் தலதா மாளிகை மற்றும் நகரத்தை சூழவுள்ள பிரதேசங்களில் சிறப்பு சோதனைகள் மற்றும் நடமாடும் சோதனைச் சாவடிகள் என்பன ஏற்படுத்தப்படவுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மூலமான ரோந்துப்பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

நகரத்தில் வசிப்போரின் ஆளடையாளங்களை உறுதிப்படுத்தல் மற்றும் ஹோட்டல் மற்றும் பிற தங்குமிடங்களில் முன்பதிவு செய்த பார்வையாளர்களின் அடையாளங்களை பரீட்சிக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு மேலதிகமாக , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரஹெர பாதைக்கு நேரடியாக அமைந்துள்ள நகரத்தின் கழிவுநீர் சீரமைப்பு திட்டம் உட்பட நகரத்திற்குள் உள்ள அனைத்து முக்கிய கட்டுமான பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தவும், நெரிசலற்ற போக்குவரத்தினை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கட்டிடங்களாக அடையாளம் காணப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு பாதுகாப்புக்கு ஏற்றவகையில் திருத்த பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு உரிமையாளர்கள் இணங்கியுள்ளதுடன் மற்றும் அத்தகைய கட்டிடங்களின் பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

விஷேட தேவைகளுக்காக கண்டி ஏரியில் படகுகள் தரித்து வைக்கப்படவுள்ள, அதேவேளை முறையே கடற்படை மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளனர்.அத்துடன் வான்வழி கண்காணிப்புக்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். அனைத்து பெரஹேர கலைஞர்களுக்கும் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும், மேலும் சந்தேகத்திடமானவர்கள் எனக் கருதப்படுபவர்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறை ஏறடுத்தப்படவுள்ளது.

அனைத்து உட்செல்லும் / வெளியேறும் இடங்களும் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் நிர்வகிக்கப்படவுள்ளதுடன் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்க சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது. மாற்று வழிகள் அடையாளம் காணப்பட்டு, நகரத்திற்குள் நுழையாமல் மற்ற பகுதிகளுக்கு பயணிப்பவர்களுக்கு போக்குவரத்து திருப்பி விடப்படும். பெரஹெர காலப்பகுதியில் ரயில் சேவையை அதிகரிப்பதற்கான கோரிக்கைகளுக்கு ரயில்வே அதிகாரிகளும் சாதகமாக பதிலளித்துள்ளனர்.

இந்த ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களும் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் வீதி தடை சோதனைகள் ஆகியவற்றை முன்னெடுக்கவுள்ளன.

இந்நிகழ்வில் தலதா மாளிகையின் தியவதன நிலமே, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, விமானப்படைத் தளபதி, பதில் கடமையாற்றும் பொலிஸ்மா அதிபர், கடற்படை பிரதானி, தேசிய புலனாய்வுத் தலைவர், விஷேட அதிரடிப்படை தளபதி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, சிரேஷ்ட முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.