புதிய இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

நவம்பர் 08, 2019

ஸ்ரீ ஜயவர்த்தனபுர, பத்தரமுல்லை பகுதியில் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை இராணுவத் தலைமையகத்தின் அங்குரார்ப்பன மற்றும் உத்தியோகபூர்வ கையளிக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று காலை (நவம்பர், 8) இடம்பெற்றது.

இவ்வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நிகழ்வில், வெகுஜன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான  கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சுமார் 77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியானது 6ஆம்  மற்றும் 7ஆம் இலக்க தொகுதிகளை ஒருங்கிணைத்த இராணுவத் தலைமையகத்துடன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளுடன் பத்து அடுக்கு மாடிகளைக் கொண்டு காணப்படுகிறது. இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய அலுவலக கட்டிடத் தொகுதியாக கருதப்படும் இப்புதிய இராணுவத் தலைமையகத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அலுவலக பணிகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளுடன் காணப்படுவதுடன், இத்தலைமையகம் அதிநவீன வசதிகளுடன் அதிநவீன பாதுகாப்பு முறைமைகள், அலுவலக அறைகள், இரண்டு உலங்குவானூர்தி இறங்குதளங்கள், தங்குமிட வசதிகள், வாகன தரிப்பிடம், உணவகங்கள், மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், மின்பிறப்பாக்கிகள், நீர் சேமிப்பு வசதிகள், நூலகங்கள் உட்பட பல்வேறு வசதிகளுடன் காணப்படுகிறது. இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த பின்னர் பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகம், கடற்படை மற்றும் விமானப்படை தலைமையகங்களும் இங்கு மாற்றப்படவுள்ளது.

இப்புதிய இராணுவ தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி சிறிசேன அவர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதன்பின்னர், ஜனாதிபதி அவர்கள் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய இராணுவ தலைமையகத்தை திறந்து வைத்தார். பின்னர் மகா சங்க உறுப்பினர்களால் “செத் பிறித்”  ஓதப்பட்டதுடன் ஏனைய  சமய தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதியினால் நாடா வெட்டப்பட்டு புதிய இராணுவத் தலைமையக பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது.

பின்னர், ஜனாதிபதி அவர்கள் புதிய இராணுவத் தலைமையகத்தின் இராணுவ தளபதி அலுவலகத்திற்கு வரவேற்கப்பட்டார். தளபதியின் புதிய அலுவலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஆகியோரின் பங்களிப்புடன்  கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இதன்பின்னர், புதிய ஜனாதிபதி பதக்கங்கலான “சேவபிமானி பதக்கம” மற்றும் “சேவா பதக்கம” ஆகிய இரண்டு சேவை பதக்கங்களும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சேவை பதக்கங்களானது 2009ஆம் ஆண்டுக்கு பிறகு பத்து வருடங்கள் களங்கமற்ற நடத்தை மற்றும்  சேவைகளுக்காக இப்பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவ்இரண்டு பதக்கங்களும் போருக்குப் பின்னரான நாட்டின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படை வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் நிறைவில் ஜனாதிபதி அவர்கள் புதிய இராணுவத் தலைமையகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார்.
 
இப்புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியானது இலங்கை இராணுவ தன்னார்வப் படை வளாகம் மற்றும் விமான நிலையம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளுடன் சுமார் 77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள. மேலும் இதனை அண்டிய ஒரு சில தனியார் காணிகளுக்கு இழப்பீடுகளும் வழங்கப்பட்டு அவைகளும் இப்புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.