முப்படையினர் பொலிஸார் மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் ஜனாதிபதிக்கு பாராட்டு

நவம்பர் 15, 2019

    வரலாற்றில் முதன்முறையாக அதிகாரத்திலிருக்கும் அரச தலைவர் பக்கச்சார்பற்று செயற்படுவதனால் நீதியும் அமைதியுமிக்க தேர்தலொன்றை நடத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

வரலாற்றில் முதன்முறையாக அதிகாரத்திலிருக்கும் அரச தலைவர் பக்கச்சார்பற்று செயற்படுவதன் காரணமாக இம்முறை தேர்தலை நீதியாகவும் அமைதியாகவும் நடத்த முடிந்துள்ளதாகவும் அது ஜனநாயகம் உறுதி செய்யப்பட்ட ஒரு நாட்டின் அடிப்படை அம்சமாகுமெனவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சிற்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நீதியான, அமைதியான தேர்தலொன்றை நடாத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அத்துறையினருக்கு தாம் பணிப்புரை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இம்முறை தேர்தல் வரலாற்று முக்கியத்துவமிக்க தேர்தலொன்றாக அமைவதற்கு தமது மத்தியஸ்த கொள்கையே காரணமாகுமெனவும் தெரிவித்தார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு ஆற்றிய செயற்பணிகளை பாராட்டி இன்று (15) முற்பகல் பொலிஸ் திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனை தெரிவித்தார்.

இன்று முற்பகல் பொலிஸ் திணைக்களத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

பொலிஸ் திணைக்களத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் தரமான, பொதுமக்களுக்கு நெருங்கிய சிறந்த பொலிஸ் சேவையினை நாட்டில் ஸதாபிப்பதற்காக பொலிஸ் திணைக்களத்தின் கீழ் மட்ட உத்தியோகத்தர்கள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரையிலான சகலரது பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து அவர்களது நலன்பேணலுக்காக ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இதன்போது பாராட்டப்பட்டன.

இதனிடையே இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி அவர்களை வரவேற்கும் விசேட நிகழ்வொன்றும் நேற்று (14) இரவு கொழும்பில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் தளபதியாக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும் இலங்கை முப்படையினரின் அபிமானத்தை பாதுகாப்பதற்காகவும் கடந்த ஐந்து வருடகாலமாக ஜனாதிபதி அவர்களால் ஆற்றப்பட்ட செயற்பணிகளைப் பாராட்டி இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, முப்படை தளபதிகள் உள்ளிட்ட முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

அத்துடன் அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களும் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்.

பல்கலைக்கழக கட்டமைப்புக்கு புத்துணர்வூட்டி அதன் மேம்பாட்டிற்காகவும் பல்கலைக்கழக மாணவர்களின் நலன்பேணலுக்காகவும் இந்நாட்டில் உயர் கல்வியின் தரத்தினை அதிகரிப்பதற்காகவும் கடந்த ஐந்து வருடகாலமாக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்களை பாராட்டி இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.

துறைசார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண்பதற்கு மிக நேர்மையுடன் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தமை தொடர்பிலும் இதன்போது அனைத்து உபவேந்தர்களும் ஜனாதிபதி அவர்களை பாராட்டினர். அத்துடன் நீதியான, சுதந்திரமான தேர்தலொன்றுக்காக ஜனாதிபதி அவர்கள் முன்னுதாரணமாக செயற்பட்டமையையும் துறைசார் வல்லுனர்கள்  பெரிதும் பாராட்டினர்.

நன்றி: pmdnews.lk