இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு

நவம்பர் 18, 2019

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) அநுராதபுரத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தும் அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன அவர்கள் வாசித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

அநுராதபுரம் ருவன்வெலிசேயவில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், தனது வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், நாட்டின் சுபீட்சத்திற்காக தன்னுடன் இணைந்து பணியாற்றுவதற்காக கைகோர்க்குமாறு நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

பௌத்த தத்துவத்தின் சமத்துவம் மற்றும் நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் தான் இந்த நாட்டை வழிநடத்தவுள்ளதாக தெரிவித்ததோடு தேசத்தின் பாரம்பரிய மரபுரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்காக அரச அனுசரணையை பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், நாட்டு மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேசத்தை கட்டியெழுப்புவதற்காக ஒரே சக்தியாக செயற்பட வேண்டிய தருணம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு ஒரு மக்கள் மைய அரசாங்கம் அவசியம் என்றும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கு அதிகபட்ச முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் தாய்நாட்டை பாதுகாப்பதற்காக அரச பாதுகாப்பு பொறிமுறை பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தனது வெளிநாட்டு கொள்கை தொடர்பாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ, வெளிநாட்டு கொள்கைகளில் நடுநிலையான நிலைப்பாட்டை பேண விரும்புவதாகவும் உலக அதிகார சக்திகளுக்கிடையிலான முரண்பாடுகளிலிருந்து விலகியிருக்க விரும்புவதாகவும் தெரிவித்ததோடு ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு இலக்குகளை அடைந்துகொள்வதற்காக தான் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் எப்போதும் சமூகத்திற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் எனவும் தொழில்வான்மையும் வினைத்திறனும் அரசாங்க நிர்வாகத்துறையின் அடிப்படையாக விளங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எல்லா சந்தர்ப்பங்களிலும் செயற்திறனும் தொழில் வல்லுனராட்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் தமது நிர்வாகத்தின் கீழ் ஊழலுக்கு இடமில்லை என்பதை வெளிப்படுத்தியதோடு இலங்கையின் இறைமையை ஏனைய நாடுகள் மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த தேர்தல் இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாசாரத்தின் அவசியத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்ததோடு இந்த முன்மாதிரி அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளிலும் வேண்டும் எனவும் அரச நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தனது கொள்கைகளை முன்னெடுப்பதற்காக ஒரு புதிய அரசாங்கத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள், இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்வது தனது பொறுப்பாகும் எனவும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

“நான் எனது நாட்டை நேசிக்கிறேன். எனது நாடு குறித்து பெருமைப்படுகிறேன். எனது நாட்டுக்கென என்னிடம் ஒரு தொலைநோக்கு இருக்கின்றது. ஆகையால் இந்த பயணத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நன்றி: pmdnews.lk