பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் ஜப்பான் கைச்சாத்து
ஜூலை 26, 2019பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு. கென்ஜி ஹரடா ஆகியோர் இன்று (ஜூலை, 26) கைச்சாத்திட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் கலந்துகொண்டார். இங்கு வருகை தந்த தூதுக்குழுவினரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. என்கேஜீகே. நெம்மவத்த அவர்கள் வரவேற்றார்.
ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலமையிலான தூதுக்குழுவினருக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையிலான துக்குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது குறித்த பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தமானது இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய இருநாடுகளுக்கிடையே கடல்சார் பாதுகாப்பு, கடற்படை ஒத்துழைப்பு, தகவல்கள் மற்றும் அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு, உரையாடல், பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, போன்ற பல்வேறு விடயக்களை பகிர்ந்துகொள்ளகூடியதாக அமையும்.
இந்நிகழ்வின்போது உரை நிகழ்த்திய ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் திரு கென்ஜி ஹரடா அவர்கள், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தினையும் இரங்கலையும் தெரிவித்தார். அத்துடன் அவர் எமது நாடான ஜப்பான், இதுபோன்ற செயல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், தமது நாடு தொடர்ந்து இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கடலோர பாதுகாப்பு நாடுகளில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான திறன் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு உரை நிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன அவர்கள், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்த ஜப்பானிய பிரதிநிதிக்கு நன்றி தெரிவித்ததுடன் நாட்டின் தெற்கில் உள்ள கடல் பாதைகள் திறந்த மற்றும் சுதந்திரமாக இருக்க வேண்டும் எனவும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை தாம் எதிர்பார்ப்பதாகவும், இது தொடர்பாக ஜப்பானுடன் கூடுதல் பரிமாற்றங்களை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜப்பானிய அரசினால் குறிப்பாக இலங்கை கடலோர பாதுகாப்பு படையினருக்கு உதவிகள், பயிற்சிகள் மற்றும் ரோந்துப்படகுகள் என பல்வேறு உதவிகள் வழங்கிய ஜப்பானிய அரசாங்கத்திற்கு தமது நன்றிகளை இதன்போது தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு திரு. ஆகிரா சுகியாமா, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு படைகளின் பணிப்பாளர் நாயகம், ஜப்பானிய தூதுதரக அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.