ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கவனம்
ஜூலை 26, 2019ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அக்கறை கொண்டிருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
ஜப்பானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரதா(Kenji Harada) ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (26) முற்பகல் சந்தித்தபோதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
இரண்டு நாடுகளினதும் சமுத்திர பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டிருப்பதால் சர்வதேச சமுத்திர பாதுகாப்பைப்போன்று சர்வதேச கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளினதும் கடற்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு ஜப்பானும் இலங்கையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
கடற்படைத்துறையில் தற்போதிருந்து வரும் நெருங்கிய ஒத்துழைப்பை இராணுவத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் இரண்டு நாடுகளுக்கிடையேயும் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அந்த ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையின் அபிவிருத்திக்காக இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு உடன்படிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கு இது முக்கியமானதொரு நடவடிக்கையாகும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜப்பானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரதா, ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு கடந்த சில வருடங்களாக துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கடற்படை ஒத்துழைப்பின் அடிப்படையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான இணைந்த கடற்படை நடவடிக்கைகள் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் வழங்கல் நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்து சமுத்திரத்தில் இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், சமுத்திரம் இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வகையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சமுத்திர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
ஜப்பான் இலங்கைக்கு நீண்டகாலமாக வழங்கிவரும் அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்காக ஜப்பான் அமைச்சருக்கு ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவர் Akira Sugiyama, ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றல் பணிப்பாளர் Masakazu Takahashi மற்றும் இராஜாங்க அமைச்சரின் நிறைவேற்று உதவியாளர் Hiroshi Kokubo ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி: pmdnews.lk