ஜனாதிபதி புது டில்லியை சென்றடைந்தார்

நவம்பர் 29, 2019

இரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (28) பிற்பகல் புது டில்லியை சென்றடைந்தார்.  

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினரை இந்திய அரச போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி வி.கே.சிங் வரவேற்றார். இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ, இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்டோர் இங்கு வருகை தந்திருந்தனர்.

வரவேற்பு நிகழ்வு பல்வேறு கலாசார அம்சங்களுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று ஜனாதிபதி அவர்கள் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கான இரண்டு நாள் அரசமுறை விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் ஏனைய இந்திய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

நன்றி: pmdnews.lk