இந்திய – இலங்கை உறவினை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல தமது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு

நவம்பர் 29, 2019

இந்திய – இலங்கை உறவினை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல தமது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் தனது முதலாவது அரசமுறை வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அவர்களை வரவேற்கும் நிகழ்வு ராஸ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதன்போது இந்தியாவிற்கு வருகைத்தரும் வெளிநாட்டு அரச தலைவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்கள், இந்த சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையிலான உறவினை பலப்படுத்தும் முக்கியமானதொரு சந்திப்பாகும் எனத் தெரிவித்தார்.

புதிய இலக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களைப் பாராட்டிய இந்திய ஜனாதிபதி அவர்கள், இதற்கு தமது நாடு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இந்திய பொது போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி வீ.கே. சிங் மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் பங்குபற்றினர்.

அதனைத் தொடர்ந்து ராஜ் காட் (Raj Ghat) சென்ற ஜனாதிபதி அவர்கள் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

விசேட அதிதிகளுக்கான குறிப்பேட்டிலும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது கையெழுத்திட்டார்.

நன்றி: pmdnews.lk