தொழில்துறை இரசாயனங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக தேசிய அதிகாரசபையை அரசு நிறுவும்

டிசம்பர் 03, 2019

''தொழில்துறையில் திட்டமிடப்பட்ட இரசாயனங்கள் முறையான செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்காமல் தொழில்துறை இரசாயனங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் தேசிய அதிகாரசபையினை  நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது '' என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன WWV RWP RSP USP ndc psc MPhil அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இன்று ( டிசம்பர், 03) இடம்பெற்ற  ஆசிய பிராந்தியத்தில் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான இரசாயன ஆயுதங்கள் மாநாடு மற்றும் இரசாயன பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான  மூன்று நாள் கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில்  பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இங்கு உரை நிகழ்த்திய பாதுகாப்பு  செயலாளர், 2007ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட  சட்டத்தின் மூலம் நாட்டில் இரசாயன ஆயுத நெறிமுறையை முழுமையாக செயல்படுத்த இலங்கை ஏற்கனவே தளத்தை  நிறுவியுள்ளது எனவும், பிரதானமாக  இந் நெறிமுறையினை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய அதிகாரசபை ஒன்றினை  பாதுகாப்பு அமைச்சின் கீழ்  அரசாங்கம் ஸ்தாபித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர்,  பாதுகாப்பு அமைச்சு, இரசாயன ஆயுத நெறிமுறையினை  திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்யும் அதே வேளை,தொழில்துறை தேவைகளை எளிதாக்கியுள்ளது என தெரவித்தார்.

"அமைதியான வழிகளில் பயன்படுத்தப்படாத இரசாயன பொருட்களை அகற்றுவது அனைவரின் பொறுப்பாகும். அனைத்து முன்னெச்சரிக்கைகள் இருந்தபோதிலும்,  இரசாயனப்பொருட்கள்  பேரழிவுக்கு பயன்படுத்தப்படுகின்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.எனவே  ஒரு சிறந்த இரசாயன பொருட்கள் கையாளுதல் தொடர்பான  நிர்வாகத்தை செயல்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது,”எனஅவர் கூறினார்.

இரசாயன  ஆயுத நெறிமுறை  மற்றும் இரசாயன பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை மற்றும் இரசாயன விபத்துக்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் நச்சு இரசாயனங்கள் முறையற்ற பயன்பாடு தொடர்பாக  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாநாடானது பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறுகின்றது.

இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில்   பணிப்பாளர்   திரு. ஜெயந்த எதிரிசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. அனுராத விஜேகூன்,  வெளியுறவு அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபைக்கான மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கான  பணிப்பபாளர் நாயகம்  திரு.எம்.ஆர்.கே.  லெனகல, அமைச்சின் சிரேஷ்ட  அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, தீயணைப்புத் துறைத் தலைவர், தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் மற்றும் அதிதிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.