நாட்டில் இராணுவத் தலைமையிலான நிர்வாகத்தை நடத்துவதற்கான எந்த நோக்கமும் இல்லை - பாதுகாப்பு செயலாளர்
நவம்பர் 23, 2019“நாட்டில் இராணுவ நிர்வாகமொன்றை முன்னெடுத்துச்செல்வதற்கான எந்த எண்ணமும் கிடையாது” என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) WWV RWP RSP USP ndc psc MPhil அவர்கள் தெரிவித்தார்.
மிஹிந்தலை ரஜமகா விகாரையின் பிரதம விகாராதிபதி சங்கைக்குரிய வலவா ஹெங்குன வெவே தம்மரத்ன தேரரை தரிசித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், நாட்டில் அமைதியைப் பேணும் பணி பொலிஸாரினால் கையாளப்படும் எனவும் இங்கு அவர் தெரிவித்தார்.
அமைதியை குழப்பும் நிலைமைகளில் பொலிஸாரினால் அதனை கட்டுப்படுத்த முடியாவிட்டால் விசேட அதிரடிப்படை அழைக்கப்படும். அவர்களினாலும் நிர்வகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாத்திரமே இராணுவம் ஈடுபடுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நியாயமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து போர்வீரர்களுக்கும் நீதியை உறுதி செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
“நாட்டில் எந்த ஒரு இடத்திலும் எவ்வித அரசியல் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கு அனுமதிக்கக்கூடாது என பதில் பொலிஸ் மா அதிபர் ஊடாக பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் தொடர்புகள், இனம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் குற்றவாளிகளைக் கைது செய்யுமாறும், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இங்கு தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் மரணமடைந்த குடும்பங்களுக்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நீதியை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.