பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு விஜயம்
டிசம்பர் 07, 2019பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் சப்புகஸ்கந்தயிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு இன்று (டிசம்பர், 07) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மேற்படி கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு செயலாளரை கல்லூரியின் கட்டளை அதிகாரி, மேஜர் ஜெனரல் பிரபாத் தேமடன்பிட்டிய அவர்கள் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு செயலாளருக்கு விஷேட அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
கமல் குணரத்ன அவர்கள் பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற பின்னர் இக்கல்லூரிக்கு மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
இவ்விஜயத்தின்போது, பாதுகாப்பு செயலாளர் அவர்கள் கல்லூரியின் பணியாளர்கள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதேவேளை, கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள விஷேட அதிதிகள் புத்தகத்தில் தனது கையொப்பத்தினையும் இட்டார்.
மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியானது, இலங்கையில் உயர்தர பாதுகாப்பு கற்கைகளை மேற்கொள்ளும் வகையில் 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி இராணுவ கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி எனும் பெயருடன் சுமார் 26 மாணவ அதிகாரிகளுடன் முதல் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, இக்கல்லூரியில் சுமார் 158 முப்படைகளையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர் அதிகாரிகள் பட்டப்படிப்பினை மேற்கொள்கின்றனர். இக்கல்லூரியானது, பாதுகாப்பு அமச்சின்கீழ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.