இலங்கை கடற்படை 69வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
டிசம்பர் 09, 2019இலங்கை கடற்படை தனது 69வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது. இதனையொட்டி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் வழிகாட்டுதல்களுடன் கடற்படையினரால் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள், சமூக நலன்புரி செயற்பாடுகள், கடற்படை நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.
இலங்கை கடற்படை தொண்டர் படையானது 1937ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் இலங்கையின் பிரித்தானிய தொண்டர் ஒதுக்குப் படையாக பிரித்தானிய கடற் படையினரின் கீழ் உள்வாங்கப்பட்டது. இலங்கை கடற்படை வரலாற்றின் திருப்புமுனையாக ஒரு புதிய அத்தியாயம் 1950 ம் ஆண்டு டிசம்பர், 09ம் திகதி பிரித்தானிய இலங்கை கடற்படை நிறுவப்பட்டது. முதலாம் குடியரசு யாப்பின் பிரகாரம் 22ம் திகதி மே மாதம் 1972ம் ஆண்டு பிரித்தானிய இலங்கை கடற்படையானது இலங்கை கடற்படை என பெயர் மாற்றம் பெற்றது.
நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டில் சமாதான மற்றும் அமைதியான யுகத்தை தோற்றுவித்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது வெளிப்படுத்திய தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் இலங்கை வரலாற்றில் தனது பெயரினை பொறித்துள்ளது. மேலும் இலங்கை கடற்படை இலங்கை தீவின் கடற்பகுதி மற்றும் அதன் வளங்களை பாதுகாப்பதில் முதற் தரத்திலான பாதுகாப்பினை நல்கிவருவதுடன் இயற்கை பேரழிவுகள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளின் போது தமது வகிபாத்தினை செவ்வனே செய்தும் வருகின்றது.
சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடு எனும் வகையில், இலங்கை கடற்படையினரால் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் பல முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், 'கோல் டயலோக்' என அறியப்படும் சர்வதேச கடல் சார் மாநாட்டின் மூலம் எதிர்கால உலக பிரச்சனைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வினை பெற்றுக்கொண்டு ஏனைய நாடுகளினுடனான பிணைப்பினை மேலும் வலுப்படுத்தி உலக அரங்கில் அனைத்து நாடுகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.