பாதுகாப்பு செயலாளர் புதிய இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

டிசம்பர் 09, 2019

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள அகுறேகொட புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு இன்று (டிசம்பர், 09) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மேற்படி புதிய தலைமையக கட்டிடத்தொகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு செயலாளரை இராணுவ தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு செயலாளருக்கு விஷேட அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

கமல் குணரத்ன அவர்கள் பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற பின்னர் புதிய தலைமையகத்திற்கு  மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

இதேவேளை, புதிய தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள விஷேட அதிதிகள் புத்தகத்தில் தனது கையொப்பத்தினையும் இட்டார்.

மேலும்,  இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

பின்னர்,  இப்புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியின்  கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு செயலாளர், குறிப்பிட்ட செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் இதன் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்  குறித்து வினவியதுடன் செயற்றிட்டத்தை விரைவு படுத்து  தொடர்பான அறிவுத்தல்களையும் வழங்கினார்.

சுமார் 77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியானது 6ஆம்  மற்றும் 7ஆம் இலக்க தொகுதிகளை ஒருங்கிணைத்த இராணுவத் தலைமையகத்துடன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளுடன் பத்து அடுக்கு மாடிகளைக் கொண்டு காணப்படுகிறது. இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய அலுவலக கட்டிடத் தொகுதியாக கருதப்படும் இப்புதிய இராணுவத் தலைமையகத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அலுவலக பணிகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளுடன் காணப்படுவதுடன், இத்தலைமையகம் அதிநவீன வசதிகளுடன் அதிநவீன பாதுகாப்பு முறைமைகள், அலுவலக அறைகள், இரண்டு உலங்குவானூர்தி இறங்குதளங்கள், தங்குமிட வசதிகள், வாகன தரிப்பிடம், உணவகங்கள், மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், மின்பிறப்பாக்கிகள், நீர் சேமிப்பு வசதிகள், நூலகங்கள் உட்பட பல்வேறு வசதிகளுடன் காணப்படுகிறது. இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த பின்னர் பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகம், கடற்படை மற்றும் விமானப்படை தலைமையகங்களும் இங்கு மாற்றப்படவுள்ளது.

நிர்மாணப்பணிகள் முற்றாக நிறைவுற்றதன் பின்னர் பாதகாப்பு அமைச்சு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகம், கடற்படை மற்றும் விமானப்படை தலைமையகம் ஆகியன இங்கு மாற்றப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.