தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்கே அரசு முன்னுரிமை அளிக்கிறது- பிரதமர் ராஜபக்ஷ

டிசம்பர் 21, 2019
  • முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் இன்னல்களுக்குள்ளாக்கப்பட்ட  மற்றும் அவமானப்படுத்தப்பட்ட இராணுவ வீரர்களுக்கு நீதிவழங்குவதாக உறுதி.
  • இறையாண்மைமிக்க,  கண்ணியமான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்ப பங்களிக்குமாறு இளம் அதிகாரிகளிடம் கோரிக்கை.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக தேசிய பாதுகாப்பை மீள ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்று  பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

"நாட்டிற்கு எதிரான உள்ளூர் மற்றும் சர்வதேச அச்சுறுத்தல்களைத் தோற்கடிக்கவே மக்கள் எம்மை அதிகாரத்திற்கு கொண்டுவந்தனர். இந்நாட்டின் அரசியல் தலைமை இப்போது தேசிய பாதுகாப்பை மீளகட்டியெழுப்பப்படுவதை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளது," என தியத்தலாவ இராணுவ கலாசாலையில் தமது பயிற்சிகளை நிறைவு  செய்து  வெளியேறும் 321 கெடட் அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் ராஜபக்ஷ அவர்கள்,  அண்மைக்காலத்தில் நடந்த ஆசியாவின் கொடிய தாக்குதலாக கருதப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பலபெரிய மற்றும் நடுத்தர அளவிலான ஹோட்டல்கள் வணிகத்தை இழந்து விட்டதால் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது எனவும்

இத்தாக்குதல் இடம் பெறாமல்   தடுப்பதற்கான   சகலவசதிகள் நிலவிய போதும் அதிகாரத்தில் இருந்தவர்களின் கவனயீனமின்மையினால் அவை நடந்தேறியதாகவும் ஆனால் இந்த அரசாங்கம் அத்தகைய சவால்கள் அனைத்தையும் முறியடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவஸ்தைகளுக்குள்ளாக்கப்பட்ட,  அவமானப்படுத்தப்பட்ட முப்படைவீரர்களுக்கு நீதியினை இவ் இராணுவ கல்லூரியில் இருந்து இரண்டாம் லெப்டினனாக வெளியேறி தற்போது சுபீட்சமிக்க தேசத்தினை உருவாக்கும் கனவினை கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்து  பெற்றுக்கொடுப்பதாக புதிதாக வெளியேறிய இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பிரதமர் ராஜபக்ஷ அவர்கள்  உறுதியளித்தார்.

ஆர்வமுள்ள இளைஞர் குழுக்கள் நாடு முழுவதும் பொது இடங்களில் சுவர்கலை செய்யமுன்வந்துள்ளனர். மக்கள் தூய்மையான,  அழகான மற்றும் வளமான இலங்கை வேண்டும் என்று விரும்புகின்றனர். 2006  ஆம் ஆண்டில் இதேபோன்ற ஆர்வம் மக்களிடையே காணப்பட்டது மற்றும் புலிகள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட ஏராளமான இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்தனர். புலிகளை   தோற்கடிப்பது சாத்தியமற்ற காரியம் என்று எல்லோரும் கருதியபோதிலும்நாட்டின் அனைத்து மக்களினதும் கூட்டுபங்களிப்பினால் விடுதலைப் புலிகளின்  பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது என அவர் தெரிவித்தார். ஒரு இறையாண்மைமிக்க,  கண்ணியமான  மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்ப பங்களிக்குமாறு இளம் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று,  நீங்கள் உலகின் மிலேச்சத்தனமான  பயங்கரவாத அமைப்பைத் தோற்கடித்த மிகவும் கண்ணியமான இராணுவத்தில் சேர்ந்தீர்கள். உலகில் உள்ள மற்ற இராணுவவீரர்களை நீங்கள் சந்திக்கும்போது,  நமது இலங்கை இராணுவம், ஏனைய  ஆயுதப்படைகளுக்கிடையேயான நற்பெயரை நீங்கள் உணருவீர்கள், ”என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இராணுவ நிரந்தர சேவையின் 87வது ஆட்சேர்ப்பு,  87 பி ஆட்சேர்ப்பு, மகளிர் நிரந்தர சேவையின் 17 வது பெண் அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு,  இராணவத்தின் தொண்டர் சேவையின்  59 வது ஆட்சேர்ப்பு  மற்றும் மகளிர் தொண்டர் சேவையின் 16 பெண் அதிகாரிளுக்கான ஆட்சேர்ப்பு ஆகியவற்றை   உள்ளடக்கிய 99 வது பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல்  (ஓய்வு) கமல் குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) சாந்த கோட்டேகொட, இராணுவ கலாசாலையின் கோமடான்ட் பிரிகேடியர். ஈஸ்வரன்,  சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெற்று வெளியேறும்  அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.