சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்பு

டிசம்பர் 23, 2019

• முப்படை , பொலிஸார் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில்

• 19095 குடும்பங்களைச் சேர்ந்த 65294 பேர் பாதிப்பு

• 123 நிலையங்களில் 15510 பேர் தங்க வைப்பு

நாட்டில் நிலவும் தொடர்மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த 112 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக 19095 குடும்பங்களைச் சேர்ந்த 65ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட 4704 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்த 510 பேர்; 123 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றுது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக விஷேடமாக வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த 13 மாவட்டங்ளிலேயே பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண வசதிகள் மற்றும் மீட்பு பணிகள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் தேசிய நிவாரண சேவைகள் நிலையம், அனர்த்த மத்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு படையினர் நிவாரண பொருட்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் முப்படையினர்கள் மற்றும் பொலிஸார் தொடர்ச்சியாக ஈடுப்பட்டு வரும் அதேசமயம், முப்படையினர் 24 மணிநேரமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான சகல நடவடிக்கைகளையும் உடனுக்குடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மோசமான கால நிலை காரணமாக 62 வீடுகள் முழு அளவிலும் 1463 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய காப்புறுதி நிதியத்தின் ஊடாக திருத்த பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விஷேடமாக மாத்தளை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது. மாத்தளை மாவட்டத்தின் யக்கல, பல்லேவத்த, நாவுல, வில்கமுவ மற்றும் ரத்தொட்ட ஆகிய பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுளளது. அதேபோன்று கண்டி மாவட்டத்தின் உடுதும்புர, யடிதும்புர பிரதேசத்திற்கும் நுவரெலிய மாவட்டத்தின் வலப்பன பிரதேசத்திற்கும் பதுளை மாவட்டத்தின் பண்ராவெல, வெலிமட ஹாலிஎல, ஊவ பரணகம பிரதேசத்திற்கும் இரத்தினபுரி மாவட்டத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலன்னறுவை மாவட்டத்தின் பராக்கிரம சமுத்திரத்திரம், அநுராதபுர மாவட்டத்தின் இராஜாங்கன, அங்கமுவ. கலாவெவ, நாச்சாதுவ, யான்ஓய நீர்தேக்கங்களினதும் புத்தளம் மாவட்டத்தின் தப்போவ, இனிமிடிய குருநாகல் மாவட்டத்தின் தெதுருஓய, அம்பகொலவெவ நீர் தேக்கங்களினதும் அம்பாறை மாவட்டத்தின் ரம்பகன்ஓய ஹம்பந்தோட்டை மாவட்டத்தின் லுனுகம்வெஹர மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னச்சி, திருகோணமலை கந்தளாய் குளம், கிளிநொச்சி இரணமடு குளம் ஆகிய வற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் நீர் பாசன திணைக்களம் 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.