அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் திறமைகளை பறைசாற்றும் இராணுவ பரா விளையாட்டு போட்டிகள்
டிசம்பர் 28, 201922வது இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (டிசம்பர், 27) சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமானது. நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமான இப்போட்டிகளில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 ரெஜிமென்ட்களிலிருந்து 700 க்கும் மேற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றுகின்றனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெறும் இவ் வருடாந்த விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதல், பெட்மிட்டன், சைக்கிள் ஓட்டம், குறி பார்த்துச் சுடுதல், டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல், சக்கர நாற்காலி மரதன் ஓட்டம், டென்னிஸ், கடற்கரை கூடைப்பந்து, நீச்சல் போட்டிகள் உள்ளிட்ட பல தடகள போட்டிகள் இடம்பெறவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைபவ ரீதியாக போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
இவ் விளையாட்டு விழாவிற்கு வரையறுக்கப்பட்ட டயலொக் அக்சியட்டா நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.
இவ்விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் இராணுவ பரா விளையாட்டு நிர்வாகக் குழுவின் தலைவரும் இராணுவ அதிகாரிகளின் பிரதி பிரதானியுமான மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1991 களில் 'இராணுவ வலுவிழந்தோர் விளையாட்டு போட்டி' என அறிமுகமான இப்போட்டிகள் 2010ஆம் ஆண்டு முதல் 'இலங்கை இராணுவ பரா விளையாட்டுப்போட்டிகள்' என அழைக்கப்படுறது.
இவ் விளையாட்டு போட்டிகள் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தமது திறமைகளை வெளி உலகுக்கு பறைசாற்ற முக்கிய களமாக அமைவதுடன் அவர்களின் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வதற்கும் வழிவகுக்கின்றன.
நாளைய தினம் (டிசம்பர், 29) இடம்பெறவுள்ள வண்ணமயமான நிறைவு நாள் நிகழ்வின்போது வெற்றியீட்டிய வீரர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.