பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரண பொதிகள் அன்பளிப்பு

டிசம்பர் 30, 2019

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் சுமார் 500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பியாச புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் காலணிகளுக்கான கிப்ட்  வவுச்சர்கள் உள்ளடங்கிய கற்றல் உபகரண பொதிகளை  வழங்கிவைத்தது.

இது தொடர்பான நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (டிசம்பர், 30) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், திருமதி சித்ராணி குணரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட  30  பிள்ளைகளுக்கான  கற்றல் உபகரண பொதிகளை  உத்தியோக  பூர்வமாக வழங்கிவைத்தார்.

பண்டிகை காலங்களில் பணியாளர்களுக்கு நலன்புரி சேவைகளை வழங்கும் வகையிலும் அவர்களின் பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிப்பை நோக்காக கொண்டும் கற்றல் உபகரண பொதிகள் வழங்கப்பட்டன. இக் கற்றல் உபகரணங்கள் படை வீரர்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் ஆகியோரின் பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ இணைப்பு அதிகாரி, சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள், மற்றும் அமைச்சின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சின் பணியாளர்களுக்காக சேவா வனிதா பிரிவினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு நலன்புரி சேவைகளில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.